சகல ஊழியர்களுக்கும்,
ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் 2018 ஜனவரி 25
– நாடு முழுவதிலுமுள்ள ப.மா.ஆ சார்ந்த அரச பல்கலைக்கழகங்கள் –
2016 ஆம் ஆண்டு யூலை 27 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8ஆம் திகதி வரை அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவால் தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்று ப.மா.ஆணைக்குழுவிலும் நாடு முழுவதிலுமுள்ள ப.மா.ஆ சார்ந்த அரச பல்கலைக்கழகங்களிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் மேற்கொள்ளப்பட்டமையைத் தொடர்ந்து ஆகஸ்ட் 8ஆம் ததிகதி உயர்கல்வி அமைச்சு, ப.மா.ஆ.குழு, தொழிங்சங்கங்களிடையே பிணக்குகளைத் தீர்ப்பது சம்பந்தமான எழுத்துமூலமான உடன்பாடொன்று எட்டப்பட்டது. இந்த உடன்பாட்டுக்கமைவாக தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த உடன்பாட்டின் பிரகாரம் ஊழியர்களின் பிணக்குகளில் சில தீர்த்துவைக்கப்பட்டாலும் உடன்பாட்டின் நிறைவேற்றப்படாத அம்சங்களை (மீள மீள நினைவூட்டியும்) நிறைவேற்றும்படி வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்டே 17.01.2018 அன்று பிக்கெட்டிங் போராட்டம் நடாத்தப்பட்டது.
உடன்பாட்டின் நிறைவேற்றப்படாத அம்சங்கள் வருமாறு.
1. மாதாந்த இழப்பீட்டுப்படி (MCA) 2016 – 2020 வரையான 5 ஆண்டு காலப்பகுதியில் 100மூ ஆக அதிகரிக்கப்படுதல் என்ற உடன்படிக்கையின் படி 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20மூ ஆல் இது அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால் இது சம்பந்தமான சுற்றுநிருபம் இதுவரை வெளியிடப்படவில்லை.
2. அந்த உடன்பாட்டின் 1(iஎ) இல் குறிப்பிடப்பட்டமையை மீறி பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர்களில் ஒரு சாராருக்கு மட்டும் 15மூ புதிய மாதாந்தக் கொடுப்பனவு (சுற்றுநிருபம் ப.மா.ஆ இல 13ஃ2017, 15.07.2017) வழங்கப்பட்டுள்ளது. இக்கொடுப்பனவானது இதுவரை போதனைசாரா ஊழியருக்கு வழங்கப்படவில்லை.
3. உடன்பாட்டின் 1(ii) க்கு அமைவாக சம்பள மீளாய்வு 01.01.2017 இலிருந்து வழங்கப்படுவதற்கு பதிலாக 01.01.2016 முதல் மீள சீர்திருத்தப்பட்டு (back dated) வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இதுவரை வழங்கப்படவில்லை.
4. 2013 ஆம் ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மொழித்திறன் கொடுப்பனவை உடன்பாட்டின் பிரகாரம் மீண்டும் வழங்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
5. பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சொத்துக்கடன் (Property loan) போதனைசாரா ஊழியர்களுக்கு பாதியளவே வழங்கப்படுகிறது. உடன்பாட்டின் பிரகாரம் சகலருக்கும் சமமாக 2மில்லியன் கடன் தொகையை வழங்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
6. சகல பல்கலைக்கழகங்களிலும் திறன்மிக்க காப்புறுதித் திட்டத்தை உருவாக்குவதற்கான செயற்றிட்டமெதுவோ, திறன்மிக்க ஓய்வூதியத்திட்டத்தை உருவாக்குவதற்கான செயற்திட்டமெதுவோ உடன்பாட்டின் பிரகாரம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
இவை இவ்வாறிருக்க பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடாமல் அல்லது தொழிற்சங்கங்களுக்கு அறியத் தராமல் பின்வரும் ஒருதலைப்பட்சமான தீர்மானங்களை எடுத்துள்ளது.
1. உதவிப்பதிவாளர், உதவி நிதியாளர், உதவி உள்ளகக் கணக்காய்வாளர் நியமனங்களில் உள்ளக ஊழியர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்ட சந்தர்ப்பங்கள் (ப.மா.ஆ சுற்றுநிருபம் 15/2017 இன் மூலம்) இல்லாதொழிக்கப்பட்டன.
2. ஆட்சேர்ப்பு எண்ணிக்கை மீளாய்வுக்கு (Cadre review) உட்படுத்தப்பட்டபோது சில நியமனங்களும், பதவியுயர்வுகளும் இல்லாமற் போனமை, பதவியுயர்வுக்கான தகைமைகள் மாற்றப்பட்டமை போன்ற புதிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
3. 2006 முதல் இன்று வரை ஆட்சேர்ப்பு விதிமுறைகள் சீர்செய்யப்படவில்லை.
4. பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவில் உள்ள உயர்நிலை பதவி உத்தியோகத்தர்களின் வெற்றிடங்களை உரியமுறையில் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்காதிருத்தல்.
2018 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி ப.மா.ஆ தலைவருக்கு இவ்விடயங்கள் தொடர்பாக கடிதம் மூலம் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு அறிவித்திருந்ததுடன் இதன் பிரதிகள் சகல பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்களுக்கும் மற்றும் உயர்கல்வி அமைச்சர், அமைச்சின் செயலாளருக்கும் அனுப்பப்பட்டன. 17.01.2018 அன்று பிக்கெட்டிங் போராட்டம் நடாத்தப்பட்டது.
மேற்படி கோரிக்கைகளை நிறைவேற்ற இதுவரை நடவடிக்கை எடுக்காதமையினால் 22.01.2018 அன்று கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எதிர்வரும் 25.01.2017 வியாழக்கிழமை அன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றை மேற்கொள்வதாக அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழு தீர்மானித்துள்ளது. அதன் பின்னரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத சந்தர்ப்பத்தில் பெப்ரெவரி மாதம் முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாகவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் பாதுகாப்பு ஊழியர்கள் தவிர்ந்த சகல கல்விசாரா ஊழியர்களையும் இப்போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். 25.01.2018 வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு இராமநாதன் மண்டப முன்றலில் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.