குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள உமாமகேஸ்வரன் வீதி, மிக மோசமாக சேதமடைந்து உள்ளமையால் அவ்வீதி ஊடாக பயணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. வவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கி செல்லும் ஹொரவபொத்தானை வீதியில் , குறித்த வீதி அமைந்துள்ளது.
கிறிஸ்தவ மதத்தவர்களின் பிரசித்தமான புனித வழிபாட்டு இடங்களில் ஒன்றான கல்வாரி மலைக்கு இவ் வீதியூடாகவே பயணிக்க வேண்டும். அத்துடன் வவுனியாவில் அமைந்துள்ள இந்து ஆலயங்களில் பிரசித்தமான ஆலயங்களில் ஒன்றான கோயிற்குளம் சிவன் கோவிலுக்கும் இவ் வீதியூடாகவே பயணிக்க வேண்டும்.
குறித்த வீதியூடாக பேருந்து சேவைகள் இடம்பெறுகின்ற போதிலும் , வீதி மிக மோசாமாக சேதமடைந்துள்ளமையால் வீதி யூடாக பயணிப்பவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
வீதியினை புனரமைப்பு செய்யுமாறு பல தடவைகள் கோரிக்கை முன் வைக்கப்பட்ட போதிலும் வீதி புனரமைப்பு வேலைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் , மாரி காலத்தில் பலத்த சிரமத்தின் மத்தியிலையே வீதியால் பயணிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மேலும் தாம் வவுனியா நகரத்தில் இருந்து தமது பகுதிக்கு இவ் வீதியூடாக செல்லவது இலகுவானது என்றாலும் வீதி மிக மோசமாக பாதிப்படைந்துள்ளமையால் , தாம் சுமார் 05 கிலோ மீற்றர் தூரம் சுற்றி மடுகந்தை ஈரபெரிய குளம் வீதி யூடாகவே பயணம் செய்வதாகவும் , தெரிவித்தனர்.
குறித்த வீதியானது , தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) ஸ்தாபகரான க.உமாமகேஸ்வரனின் பெயரில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளை குறித்த வீதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடங்கள் மக்கள் பாவனையற்று பற்றைக்காடுகள் சூழ்ந்துள்ளன.