தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் பார்ப்போரை பக்தி கொள்ள வைக்கும் நிலையில் காட்சி அளிக்கிறது பழனி. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் எதிர்வரும் 30ஆம் திகதி மாலையும், தொடர்ந்து வெள்ளித் தேரோட்டமும், 31ஆம் திகதி தைப்பூசத் தேரோட்டமும் நடைபெற உள்ளன.
60 ஆண்டுகளுக்குப் பிறகு தைப்பூச தினத்தன்று சந்திர கிரஹணம் வருகின்றமையால் இந்த ஆண்டு காலையிலேயே தைத்தேரோட்டம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவிழாவையொட்டி பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக, குடிநீர், மலசல அறை வசதிகள், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை, கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. அத்துடன் 4,000 பொலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.