பிணைமுறி மோசடி சம்பந்தமான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் சம்பந்தமான அறிக்கைகள் தொடர்பாக முடிந்தால் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்திக் காட்டுமாறும் அந்த அறிக்கைகளை உடனடியாக பாராளுமன்றத்திற்கு சமர்பிக்குமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சவால் விடுத்துள்ளார். இன்றையதினம் பாணந்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி ஊழல் மற்றும் பாரிய ,லஞ்ச ஊழல், மோசடி என்பவற்றை மேற்கொண்டு நாட்டின் அரச வளங்களையும் மக்களின் பணத்தையும் கொள்ளையிட்டவர்கள் யார் என மக்கள் நன்றாக அறிவார்கள் எனத் தெரிவித்த ஜனாதிபதி ஒருபோதும் உண்மையை மக்களிடமிருந்து மறைத்துவைக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
எனினும் அந்த அறிக்கைகள் தொடர்பில் குரல் கொடுத்த அனைத்து திருடர்களும் ஒன்றிணைந்து அது தொடர்பில் விவாதம் நடத்துவதை பிற்போட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்
அந்த அறிக்கைகள் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்பட்டால் பெரும்பாலானோரின் தவறுகள் நாட்டிற்கு வெளிச்சமாகும் என்று தெரிவித்த ஜனாதிபதி எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறும் தேர்தலுக்கு முன்னர் முடியுமானால் ஒரே ஒரு தினமாவது அவ்வறிக்கை குறித்த விவாதத்தை மேற்கொள்ளுமாறு தான் அவர்களுக்கு அழைப்பு விடுப்பதாக தெரிவித்துள்ளார்