யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கட்டும். ஆனால் தமிழக முதல்-அமைச்சராவது தமிழராக மட்டுமே இருக்க வேண்டும் என நடிகர் ராதாரவி கூறியுள்ளார். திருவாரூரில் நடந்த மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவது நல்லது. இதுவரை வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் சென்று நடித்து வந்தவர்கள், தமிழகத்தை பற்றியும், தமிழக மக்களை பற்றியும் தெரிந்து கொள்ளட்டும்.
ரஜினியின் ஆன்மிக அரசியல் என்பது குறித்து பல வழிகளில் விடை தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து யாரிடமாவது கேட்கலாம் என்று உள்ளேன். ரஜினி நல்லவர்களை கொண்டுதான் அரசியல் நடத்துவேன் என தெரிவித்துள்ளார். ஒருவேளை புத்தர், மகாவீரர் போன்றவர்களை அழைத்து வந்து அரசியல் நடத்துவார் என நினைக்கிறேன்.
விஷால் மிகவும் நல்லவர். ஆர்.கே.நகரில் 1,500 வாக்குகள் என நினைத்து போட்டியிட சென்றுள்ளார். அவருக்கு கையெழுத்து போடுவதற்கு 10 பேர் கூட உடனில்லை என்பது வேதனைக்கு உரியது. அவரை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
கமல், ‘நாளை நமதே’ என தொடங்கி பிரசாரம் செய்ய உள்ளார். அவருடைய ஊரையே அவர் பார்த்ததில்லை. முதலில் அவர், அதை பார்க்க வேண்டும். தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் முதல்-அமைச்சராவது தமிழனாக மட்டுமே இருக்க வேண்டும். பிறப்பால் இந்தியர்கள் மட்டுமே ஜனாதிபதி, பிரதமர் பதவி வகிக்க முடியும் என்பது போன்று பிறப்பால் தமிழர் மட்டுமே தமிழகத்தின் முதல்-அமைச்சராக வர வேண்டும்.