179
அமெரிக்காவை சேர்ந்த பிரபல எழுத்தாளரான மைக்கேல் வோல்ஃப் என்பவர் அண்மையில் வெளியிட்ட ‘பயர் அன்ட் பியூரி’ என்ற நுலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக பதவி வகிக்கும் இந்திய வம்சாவளிப் பெண்ணான 46 வயதுடைய நிக்கி ஹாலே இரகசியத்தொடர்பு வைத்திருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த விடயம் அமெரிக்காவில் விவாதப் பொருளாக மாறியுள்ளமை தொடர்பாக, நிக்கி ஹாலே நேற்று தனது மறுப்பை வெளியிட்டுள்ளார்.
மைக்கேல் வோல்ஃப் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ள கருத்து உண்மையல்ல என்பதுடன் அருவருப்ப்பாபான மற்றும் பழிபோடும் செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் தொடர்பான செய்திகளை வெளியிடும் ‘பொலிட்டிக்கோ’ ஊடகத்துக்கு சமீபத்தில் பேட்டியளித்த நிக்கி ஹாலே இந்த சர்ச்சை தொடர்பாக கருத்து வெளியிடுகையில்,
“அமெரிக்க அதிபர் பயணம் செய்யும் தனி விமானத்தில் நான் டிரம்ப்புடன் ஒரேயொரு முறை மட்டும் சென்றிருக்கிறேன். அப்போது நான் இருந்த இடத்தில் எங்களை சுற்றி பலரும் இருந்தனர். எனது அரசியல் எதிர்காலம் தொடர்பாக நான் அதிபரின் வெள்ளை மாளிகை அலுவலகத்தில் டிரம்ப்புடன் அதிகமாக பேசியதாக மைக்கேல் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். எனது எதிர்காலத்தை பற்றி அவருடன் நான் ஒருபோதும் பேசியதில்லை.”
“பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும், தெற்கு கரோலினா மாநில கவர்னராக பதவி வகித்தபோதும் இதுபோன்ற வதந்திகளை நான் எதிர்கொண்டுள்ளேன். இப்போதும் நான் இதை அப்படிதான் பார்க்கிறேன். இதனால் என்னை நிலைகுலைய வைத்துவிட முடியாது, ஒவ்வொரு முறை இதுபோன்ற பழிக்கு நான் இலக்காகும்போதும் அதை எதிர்த்து அதிக பலத்துடன் போராடும் எண்ணம்தான் ஏற்படுகிறது. இந்த போராட்டத்தை நான் எனக்காக மட்டும் நடத்துவதில்லை. என்னைப்போல இழிச்சொல்லுக்கு ஆளாகி வேதனைப்படும் இதர பெண்களும் தங்களது எதிரிகள் தங்களை தாழ்த்தி விடுவார்களோ? என்ற அச்சத்துடன் தலைகுனிய தேவை இல்லை என்பதை உணர்த்தவே நான் போராடுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Spread the love