குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் குடியுரிமை ரத்து செய்வது குறித்து பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பான ஆணைக்குழுவில் பரிந்துரை செய்யப்படவில்லை என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறுவதனைப் போன்று ஜனாதிபதி ஆணைக்குழு மஹிந்தவின் குடியுரிமையை ரத்து செய்வது குறித்து பரிந்துரைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகளில் மஹிந்தவின் குடியுரிமை ரத்து செய்வது குறித்து எங்கேனும் குறிப்பிடப்பட்டிருந்தால் அது பற்றி சுட்டி காட்டுமாறு பிரதமருக்கு சவால் விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடிகளுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்தால், ஜனாதிபதிக்கு பூரண ஆதரவளிக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.