Home இந்தியா மகாத்மா காந்தியும் நெருக்கமான 8 பெண்களும்…

மகாத்மா காந்தியும் நெருக்கமான 8 பெண்களும்…

by admin

மகாத்மா காந்தியின் புகைப்படங்களில் பெரும்பாலானவற்றில் மக்கள் படை சூழவே அவரைப் பார்க்கமுடியும். பெரும்பாலும் காந்தியுடன் புகைப்படத்தில் இருப்பவர்கள் அனைவராலும் அறியப்பட்ட பிரபலங்களாகவே இருப்பார்கள். உதாரணமாக, ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல், கஸ்தூர்பா காந்தி என பட்டியல் நீளும். காந்தியுடன் புகைப்படத்தில் காணப்படும் சிலரைப் பற்றி பலருக்கு  தெரியாத  விடயங்கள் பற்றி இங்கு பேசப்படுகிறது..

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியுடன் நெருக்கமாக இருந்த ஒரு சில பெண்களைப் பற்றி பார்க்கலாம். காந்தி இந்த பெண்களின் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், அவர் காட்டிய வழியிலேயே தங்கள் வாழ்வை நடத்தியவர்கள்.

1. மெடெலீன் ஸ்லேடு (எ) மீராபென் (1892-1982)

மீராபென்
படத்தின் காப்புரிமைVINOD KUMAR

பிரிட்டிஷ் அட்மிரல் சர் எட்மண்ட் ஸ்லேட் என்பவரின் மகள் மெடெலீன். ஜெர்மனை சேர்ந்த பியானோ இசைக்கலைஞர் மற்றும் இசையமைப்பாளர் பீத்தோவனின் மிகப்பெரிய ரசிகை மெடெலீன்.

பீத்தோவனின் இசை மீது கொண்ட பேராவலில் அவரைப்பற்றியும், இசையைப் பற்றியும் எழுதிய எழுத்தாளர் மற்றும் பிரஞ்சு அறிஞர் மற்றும் எழுத்தாளர் ரோமன் ரோலண்டின் எழுத்துக்களையும் விரும்பி படித்தார். ரோலண்ட் இசையைப் பற்றி மட்டுமல்ல அகிம்சையை போதித்த காந்தியைப் பற்றிய வாழ்க்கை சரிதத்தையும் எழுதினார்.

காந்தியின் வாழ்க்கை வரலாறை படித்த மெடெலீன், அவரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரை கடிதங்கள் மூலம் தொடர்பு கொண்டார். இந்தியாவுக்கு வந்து காந்தியின் ஆசிரமத்தில் வசிக்க விருப்பம் கொண்டார்.

மதுவை ஒதுக்கினார், விவசாயம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார், சைவ உணவுக்கு மாறினார். ‘யங் இந்தியா’ என்ற காந்தியின் பத்திரிகையையும் படிக்க ஆரம்பித்தார். அக்டோபர் 1925இல், அவர் மும்பை வழியாக அகமதாபாத்தை அடைந்தார்.

காந்தி
படத்தின் காப்புரிமைGETTY IMAGES

காந்தியுடனான முதல் சந்திப்பிற்கு பிறகு மெடெலீன் சொன்னார், “நான் அங்கு வந்தபோது, வெண்ணிற இருக்கையில் இருந்து மெலிந்த உருவம் கொண்ட ஒருவர் என்னை நோக்கி வந்தார். அவர் தான் ‘பாபு’ என்று எனக்கு தெரியும். ஒரு தெய்வீக சக்தியின் முன் நிற்பதை உணர்ந்தேன்.

மகிழ்ச்சியும், பக்தி உணர்வும் என்னில் தோன்றின. நான் பாபுவின் பாதங்களில் சரணடைந்துவிட்டேன். பாபு என்னை தூக்கிவிட்டு சொன்னார், ‘நீ என் மகள்’.

மெடெலீன் காந்தியை சந்தித்த நாள் முதல் அவர்கள் இருவருக்கும் இடையில் பவித்திரமான உறவு உண்டானது. மெடெலீன், ‘மீராபென்’ என்ற பெயரால் அனைவராலும் அழைக்கப்பட்டார்.

2. நிலா க்ராம் குக் (1972-1945)

காந்தி ஆசிரமத்தில் உள்ளவர்கள் நிலாவை ‘நாகினி’ என அழைக்கிறார்கள். தான் உண்மையில் கண்ணனின் கோபிகை என்று நம்பிய நிலா, மௌண்ட் அபுவில் ஆன்மீக குருவுடன் வாழ்ந்தார்.

மீராபென்
படத்தின் காப்புரிமைGETTY IMAGES, VINOD KUMAR

அமெரிக்காவில் பிறந்த நிலாவுக்கு மைசூர் இளவரசர் மீது காதல் ஏற்பட்டது.

1932ஆம் ஆண்டில், பெங்களூரில் இருந்து காந்திக்கு கடிதம் எழுதிய நிலா, அதில் தீண்டாமை தொடர்பாக குறிப்பிட்டிருந்தார். இவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு இப்படித்தான் தொடங்கியது.

அடுத்த ஆண்டு, அதாவது பிப்ரவரி 1933ல், யர்வடா சிறைச்சாலையில் மகாத்மா காந்தியை சந்தித்தார் நிலா. காந்தியின் சொற்படி சபர்மதி ஆசிரமத்திற்கு சென்ற நிலா சில நாட்களிலேயே அங்கு இருப்பவர்களுடன் நெருக்கமானார்.

தாராளவாத கருத்தியலை கொண்ட நிலாவுக்கு ஆசிரமம் போன்ற அமைதியான இடத்தில் வசிப்பது கடினமாக இருந்தது. அங்கு இருக்கமுடியாமல் ஒருநாள் ஆசிரமத்தை விட்டு வெளியேறினார். பின்னர், அவர் கிருஷ்ணர் வாழ்ந்த பிருந்தாவனத்தில் இருந்தார்.

அங்கிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட அவர், இஸ்லாம் மதத்தை தழுவினார். குரானை மொழிபெயர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. சரளா தேவி சௌத்ரானி (1872-1945)

உயர் கல்வி பயின்ற சரளா தேவி, பார்ப்பதற்கே மிகவும் மென்மையானவர். மொழி, இசை மற்றும் எழுத்தாற்றலில் வல்லவரான சரளா வங்கமொழிக் கவிஞர் ரவிந்திரநாத் தாகூரின் நெருங்கிய உறவினர்.

சரளா தேவி சௌத்ரானி
படத்தின் காப்புரிமைGETTY IMAGES, VINOD KAPOOR

லாகூரில், காந்தி சரளாவின் வீட்டில் தான் தங்கியிருந்தார். இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக இருந்தனர். சரளாவின் கணவர் சுதந்திர போராட்ட வீரர் ராமபூஜ் தத் சௌத்ரி. அவர் சிறையில் இருந்தார். சரளாவை தனது ‘ஆன்மீக மனைவி’ என்று காந்தி கூறினார். இந்த உறவின் காரணமாகவே தனது திருமணம் முடிவுக்கு வரவில்லை என்று நம்புவதாக காந்தி பிறகு கூறினார்.

காந்தியும், சரளாவும் காதியை ஊக்குவிக்கும் பிரசாரத்திற்காக லாகூரிலிருந்து தற்போதைய இந்தியாவுக்கு வந்தார்கள். காந்தியின் நெருங்கிய நண்பர்களுக்கும் சரளாவுடனான காந்தியின் உறவு பற்றி தெரிந்திருந்தது. உரிமையுடன் பழகும் சரளாவின் குணம், விரைவிலேயே காந்தியை அவரிடமிருந்து விலகச் செய்தது. அதன்பிறகு சிறிதுகாலம் இமயமலையில் தனியாகவே வாழ்ந்து இறந்துபோனார் சரளா.

4. சரோஜினி நாயுடு (1879-1949)

இந்திய தேசிய காங்கிரஸ் முதல் பெண் தலைவர் சரோஜினி நாயுடு.

சரோஜினி நாயுடுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

விடுதலை போராட்டத்தில் காந்தி கைது செய்யப்பட்ட பிறகு உப்பு சத்தியாக்கிரகத்திற்கு தலைமை தாங்கியவர் சரோஜினி நாயுடு. சரோஜினியும், காந்தியும் முதன்முதலில் லண்டனில் சந்தித்தனர்.

சரோஜினி இந்த சந்திப்பைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: “குள்ளமான ஒருவர், வழுக்கை தலைகொண்ட ஒருவர் தரையில் கம்பளி விரிப்பின் மீது அமர்ந்து ஆலிவ் எண்ணெயில் சமைத்த தக்காளியை சாப்பிட்டுக்கொண்டிருந்தார். உலகின் பிரபலமான தலைவரின் இந்த நிலையை பார்த்து நான் மகிழ்ச்சியுடன் சிரித்தேன்.

அதை பார்த்த அவர் என்னிடம், ‘நீங்கள் தான் திருமதி. நாயுடுவாக இருக்கமுடியும். வேறு யாரும் இப்படி பயமற்றவர்களாக இருக்க முடியாது, வாருங்கள், என்னுடன் உணவு உண்ணுங்கள். ” காந்தியின் விருந்தோம்பலுக்கு பதிலளித்த சரோஜினி, “என்ன ஒரு மோசமான வழி இது?” என்று சொன்னாராம். சரோஜினி மற்றும் காந்தி இடையிலான உறவு இப்படித்தான் தொடங்கியது.

5.இளவரசி அம்ருத் கெளர் (1889-1964)

ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் இளவரசி அம்ருத் கெளர். பஞ்சாபில் கபூர்தாலாவின் அரசர் சர் ஹர்னம் சிங்கின் மகள் அம்ருத் கெளர்.

இளவரசி அம்ருத் கெளர்
படத்தின் காப்புரிமைGETTY IMAGES, VINOD KAPOOR

இங்கிலாந்தில் கல்வி பயின்ற இளவரசி அம்ருத் கெளர், காந்திக்கு மிகவும் நெருக்கமானவர். இவர் காந்தியின் மிகச் சிறந்த அறப்போராளிகளில் ஒருவராக கருதப்படுபவர்.

கெளர் 1934இல் காந்தியை முதன்முதலாக சந்திப்பின் பின்னர், காந்திக்கும் இளவரசி அமிருத் கெளருக்கும் இடையே நூற்றுக்கணக்கான கடிதங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. உப்பு சத்தியாக்கிரகம் மற்றும் 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போதும் இளவரசி அமிருத் கெளர் சிறைவாசத்தையும் அனுபவித்தார். இந்தியாவின் முதல் சுகாதார அமைச்சராக பதவி வகித்தவர் இளவரசி அமிரித் கெளர்.

இளவரசி அம்ருத் கெளருக்கு காந்தி எழுதும் கடிதங்களில், ‘என் அன்புக்குரிய பைத்தியமே, என்றும் புரட்சிக்காரி’ என்றும் குறிப்பிடுவார். கடிதத்தின் இறுதியில் ‘சர்வாதிகாரி’ என்றும் குறிப்பிடுவார் காந்தி.

6. டாக்டர் சுஷிலா நய்யார் (1914-2001)

பியரேலாலின் சகோதரி சுசீலா. மஹாதேவ் தேசாய்க்கு பிறகு, காந்தியின் செயலாளராக பணிபுரிந்த பியாரேலால் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர்.

சுஷிலா நய்யார்
படத்தின் காப்புரிமைVINOD KAPOOR

தாயின் கடுமையான எதிர்ப்புகளுக்கு பிறகும் இந்த அண்ணனும், தங்கையும் காந்தியை வந்து பார்த்தார்கள். பிறகோ, காந்தியிடம் தன் பிள்ளைகளை செல்ல வேண்டாம் என்று தடுத்த அந்த தாயே காந்தியின் தீவிர ஆதரவாளராகவும் மாறினார்.

மருத்துவ படிப்புக்கு பிறகு சுஷிலா, காந்தியின் பிரத்யேக மருத்துவர் ஆனார். வயது முதிர்ந்த காந்தியை மனு மற்றும் ஆபா தோள்களில் கைத்தாங்கலாக அழைத்து வருவார்கள். அவர்களைத் தவிர சுஷிலாவும் காந்தியை கைதாங்கலாக அழைத்துவருவார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது கஸ்தூர்பா காந்தியுடன் சேர்ந்து போராடிய சுசீலாவும் மும்பையில் கைது செய்யப்பட்டார். பூனாவில் கஸ்தூர்பா காந்தியின் கடைசி நாட்களில் அவருடன் இருந்தார் சுஷிலா. பிரம்மச்சார்ய சோதனைகளில் காந்தி ஈடுபட்டபோது அதற்கு சுஷிலாவும் உதவி செய்தார்.

7. அபா காந்தி (1927-1995)

பிறப்பில் வங்காளியான அபாவின் திருமணம் காந்தியின் பேரன் கனு காந்தியுடன் நடைபெற்றது.

அபா காந்தி
படத்தின் காப்புரிமைVINDO KAPOOR

காந்தியின் பிரார்த்தனை கூட்டங்களில் அபாவும் கலந்து கொண்டு பக்திப் பாடல்களை பாடுவார். 1940களில் எடுக்கபப்ட்ட மகாத்மா காந்தியின் பல புகைப்படங்களை எடுத்தவர் கனு.

காந்தியின் நவகாளி யாத்திரையின்போது அபாவும் அவருடன் சென்றிருந்தார். நாடு முழுவதிலும் வன்முறைகள் பரவியது. அப்போது, இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக சென்ற காந்தியுடன் அபாவும் சென்றார். காந்தியின் இறுதிக் கணங்களிலும் அபா அவருடன் இருந்தார். நாதுரம் கோட்ஸே காந்தியை சுட்டுக் கொன்றதை நேரில் பார்த்தவர் அபா.

8. மனு காந்தி (1928-1969)

மிக இளம் வயதிலேயே காந்தியிடம் வந்துவிட்டார் மனு. காந்தியின் தூரத்து உறவினரான மனுவை பேத்தி என்றே அழைப்பார் காந்தி.

மனு காந்தி
படத்தின் காப்புரிமைVINOD KAPOOR, GETTY

காந்தியின் நவகாளி யாத்திரையின்போது அபா மட்டுமல்ல, மனுவும் அவருடனே இருந்தார். உடல் பலவீனப்பட்ட காந்தி நடப்பதற்கு தோள் கொடுத்து உதவி செய்வார் மனு.

மகாத்மா காந்தியின் பாதையில் மல மூத்திர கழிவுகளை அவரது சில விரோதிகள் வீசியபோது, காந்தியுடன் சேர்ந்து, கையில் விளக்குமாற்றுடன் அவற்றை சுத்தம் செய்தவர்கள் மனுவும் அபாவும். காந்தியின் மனைவி கஸ்தூர்பாவின் இறுதி நாட்களில் அவருக்கு சேவை செய்தவர்களில் மனுவும் ஒருவர். மகாத்மா காந்தியின் கடைசி சில ஆண்டுகள் எப்படி கழிந்தன என்பது பற்றிய குறிப்புகள் மனுவின் நாட்குறிப்பில் இடம்பெற்றிருக்கிறது.

BBC

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More