திரிபுராவில் தொடர்ந்து ஐந்து முறை முதல்வராக இருக்கும் மாணிக் சர்காரின் வங்கிக்கணக்கில் 2,410 ரூபாய் மட்டுமே இருப்பு உள்ளதாக தனது வேட்புமனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் மிக ஏழை முதல்வர் என்று குறிப்பிடப்பட்ட திரிபுரா முதல்வர் மாணிக் சர்கார் 1980-ம் ஆண்டில் முதன் முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சட்டசபை உறுப்பினராக தேர்வானார். 1998-ம் ஆண்டில் முதல்வராக பொறுப்பேற்ற இவர் தற்போது வரை முதல்வராக உள்ளார்.
20 ஆண்டுகளாக முதல்வராக இருந்து வரும் சர்கார் 4 முறையும் தன்பூர் தொகுதியில் இருந்தே தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொதுவாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளவர்கள் தங்களது ஊதியத்தை கட்சிக்கு அளிக்கும் முறை (லெவி) உள்ளது. அதன்படி, தன்னுடைய மாத ஊதியத்தை சர்கார் கட்சிக்கு வழங்கி விடுவார்.
மாதம்தோறும் கட்சி 5000 ரூபாயை சர்காருக்கு வழங்கும். தனது மனைவியுடன் அரசு குடியிருப்பில் வசிக்கும் சர்காருக்கு சொந்தமாக வீடு, கார் உள்ளிட்ட சொத்துகள் எதுவும் இல்லை. சர்காருக்கு குழந்தைகளும் இல்லை. தனது மாநில மக்களே தன்னுடைய குழந்தைகள் என அவர் எப்போதும் குறிப்பிடுவார்.
அடுத்த மாதம் தேர்தல் நடக்க உள்ள நிலையில், நேற்று வேட்புமனுவை சர்கார் தாக்கல் செய்தார். அதில், தனது வங்கிக்கணக்கில் 2,410 ரூபாயும், கையிருப்பில் 1,520 ரூபாயும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தனது வாழ்நாளில் வருமான இதுவரை வரி கட்டியதே இல்லை என்றும் அவர் வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். மத்திய அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற சர்காரின் மனைவி பாஞ்சலி பட்டாச்சாரியாவிடம் 20 ஆயிரம் ரூபாய் கையிருப்பாக உள்ளதாகவும், 2 லட்சம் ரூபாய் வங்கியில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மிக நீண்ட காலம் முதல்வராக உள்ளவர்களில் மாணிக் சர்காரும் ஒருவர். மறைந்த மேற்கு வங்க முதல்வர் ஜோதி பாசு நீண்ட கால முதல்வர் என்ற சாதனைக்கு உரியவர். 1977 முதல் 2000 வரை 23 ஆண்டுகள் முதல்வராக அவர் பணியாற்றியுள்ளார். ஜோதி பாசுவும் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் சிக்கிம் முதல்வர் பவான் குமார் சாம்ளிங் 1994-ம் ஆண்டு முதல் தற்போது வரை முதல்வராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.