லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிவிவகார அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க கூறியுள்ளார்.
கடந்த சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் கழுத்தை அறுப்பதாக சைகை காட்டினார் என குற்றம் சுமத்தப்பட்டது.
இதனையடுத்து தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் ராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை, உடனடியாக அமுலுக்கும் வரும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்யுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தது. எவ்வாறாயினும் அந்த பணி நிறுத்தத்தை இரத்து செய்து அவரை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க கூறியுள்ளார்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பாக பிரிகேடியரை பணி நீக்கம் செய்ததாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வழங்கிய உத்தரவு குறித்த செய்தியை கேள்விக்குறியுடனேயே (புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்திய இராணுவ அதிகாரியின் சேவை இடைநிறுத்தம்?) குளோபல் தமிழ்ச் செய்திகள் பிரசுரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்திய இராணுவ அதிகாரியின் சேவை இடைநிறுத்தம்?
புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்திய இராணுவ அதிகாரியின் சேவையை இடைநிறுத்துவதற்கு வெளிவிவகார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது. புலம்பெயர் தமிழர்களை கழுத்தறுத்து கொலை செய்வதாக சைகை மூலம் காட்டியிருந்ததாக படையதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லண்டனில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றி வரும் பிரிகேயர் பிரியங்க பெர்னாண்டோவே இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.
இது தொடர்பிலான காட்சிகளும் புகைப்படங்களும் சமூக மற்றும் இணைய ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தன. ராஜதந்திரியொருவர் இவ்வாறு வெளிநாடொன்றில் செயற்படுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன் ரயன், சியோபாயின் மெக்டொனா ஆகியோர் குற்றம் சுமத்தியுள்ளதுடன், இது தொடர்பில் பிரித்தானிய வெளிவிவகார செயலாளரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர்.
கடந்த 4ம் திகதி உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகளின் போது, படையதிகாரி இவ்வாறு சைக செய்திருந்தார். மேலும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் பிரிகேடியர் பிரியந்த பெர்னாண்டோ நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் மீது படையதிகாரி அடக்குமுறையை பிரயோகிக்க முயற்சித்துள்ளதாக தொழிற் கட்சிக்கான தமிழர் அமைப்பின் தலைவர் சென் கந்தையா தெரிவித்துள்ளார்.