177
யாழ்.புங்குடுதீவு பகுதியில் கடற்படையினரின் பவள் கவச வாகனம் மோதியதில் பாடசாலை மாணவி பலியானமை தொடர்பில் கைது செய்யப்பட்ட கடற்படை சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளார். புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்கு அருகில் கடந்த மாதம் 24ஆம் திகதி ஏற்பட்ட விபத்தில் புங்குடுதீவு ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் கல்வி கற்ற மாணவி உயிரிழந்திருந்தார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பவள் கவசவாகன கடற்படை சாரதி அன்றைய தினம் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார். குறித்த வழக்கு இன்றைய தினம் புதன் கிழமை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ .எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது.
அதன் போது , மாணவியை பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்ற மாணவியின் மாமனாரையும் காவல்துறையினர்ர் கைது செய்து வழக்கில் சந்தேக நபராக இணைத்திருந்தனர்.
விசாரணையின் போது நீதிவான் , குற்றத்திற்கு உடந்தை அளித்தவர்களை , அந்த குற்றத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேக நபர்களாக வழக்கில் இணைக்கலாம். ஆனால் மாமனாரை எந்த அடிப்படையில் வழக்கில் இனைக்கப்பட்டார் என கேட்ட போது , மாணவிக்கு தலைகவசம் அணியாது , மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றமையால் வழக்கில் இணைத்துள்ளாதாக காவல்துறையினர் கூறினார்கள்.
அதன் போது நீதிவான் கண்டிப்புடன் காவல்துறையினருக்கு அறிவுறுத்தலையும் வழங்கினார். தலைக்கவசம் அணியாது அழைத்து சென்றமை தனி வழக்காக பதிவு செய்யப்பட வேண்டுமே தவிர விபத்து வழக்கில் விபத்தினை ஏற்படுத்தி மரணத்தை விளைவித்த குற்றசாட்டில் சந்தேக நபர்களில் ஒருவராக அவரை இணைக்க முடியாது என நீதிவான் காவல்துறையினருக்கு அறிவுறுத்தி இருந்தார்.
அதன் போது குறித்த வழக்கில் சந்தேக நபர்களில் ஒருவராக மாணவியின் மாமனாரும் இணைக்கப்பட்டு இருந்த நிலையில் , மாமனார் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மாமனருக்கு பிணை கோரி மன்றில் விண்ணப்பம் செய்தார். அதனை தொடர்ந்து மாமனாருக்கு ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்தார்.
குறித்த வழக்கில் சாரதியான கடற்படை சிப்பாயும் , மாணவியின் மாமனாரும் , இணைக்கப்பட்டு உள்ளமையால் , ஒரு அப்பாவி தண்டிக்கப்பட கூடாது எனும் நோக்கம் மன்றுக்கு உள்ளமையால் , அந்த வழக்கில் மாமனாருக்கு பிணை வழங்கப்படும் போது என்ன பிணை நிபந்தனைகள் உள்ளனவோ அதே பிணை நிபந்தனைகளுடன் சாரதியும் பிணையில் செல்ல அனுமதிகப்படுகின்றார் என நீதிவான் தெரிவித்தார்.
Spread the love