இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் சொத்துக்கள் ஏலத்திற்கு விடப்படுவதாக வந்த செய்திக்கு கவிதாலயா நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ் திரை உலகின் பிதாமகன் என்றும், இயக்குனர் சிகரம் என்றும் அழைக்கப்பட்ட கே.பாலச்சந்தர். சினிமாவின் மிக உயரிய தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர். 1981-ம் ஆண்டு கவிதாலயா என்ற சினிமா படதயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.
கவிதாலயா நிறுவனத்தில் பாலசந்தரின் மனைவி ராகம் பாலச்சந்தர், மகள் புஷ்பா கந்தசாமி ஆகியோர் பங்குத்தாரர்களாக செயல்பட்ட நிலையில் கவிதாலயா நிறுவனம் சார்பில் வங்கியில் கடன் பெறப்பட்டது. இந்தநிலையில் கடனை திருப்பி செலுத்தப்படாததால் சொத்துக்கள் ஏலம் விடப்படும் என்று வங்கி கடிதம் அனுப்பி உள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள கவிதாலயா நிறுவனம் திரு.கே.பாலச்சந்தரின் வீடு மற்றும் அலுவலகம் ஏலம் விடப்படுவதாக வெளி வந்திருக்கும் பத்திரிகை ஊடகச் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனத் தெரிவித்துள்ளது.
கவிதாலயா டி.வி.தொடர் தயாரிப்புக்காக அரசுடமை வங்கி ஒன்றில் 2010-ல் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான வேறு சொத்துக்களை அடமானம் வைத்து கடன் வாங்கியதாகவும் முதலும் வட்டியும் சேர்த்து கணிசமான தொகையையும் செலுத்தி விட்டதாகவும் மீதமுள்ள கடன் பாக்கியை செலுத்துவதற்கு வங்கியுடன் பேச்சு வார்த்தையை சட்ட ரீதியாக நடத்தி வருகிறதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன் முதலில் ரஜினியை வைத்து நெற்றிக்கண் படத்தை எடுத்த பாலச்சந்தர் அண்ணாமலை, ரோஜா, முத்து, சாமி, திருமலை, குசேலன் உள்பட 63 படங்களை தயாரித்தார். அத்துடன் தெலுங்கு, இந்தி, கன்னடத்திலும் படங்களை தயாரித்த அவர் பட விநியோகத்திலும் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது