குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஒற்றுமைக்கு அர்த்தம் வேண்டும் அர்த்தமில்லாத ஒற்றுமை எமக்கு தேவையற்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தல் நிலைமைகளின் அடிப்படையில் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் உள்ள தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என பல தரப்பாலும் கோரிக்கை முன் வைக்கப்பட்டு வருகின்றது. அந்நிலையில் , அது தொடர்பில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
தமிழ் தேசிய கூட்டமைப்பு தம்மை தமிழ் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சியாக அடையாளப்படுத்துவது விந்தையானது. கடந்த 8 வருட காலத்தில் தமிழ் தேசியத்திற்காக கூட்டமைப்பு என்ன செய்தது. தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்து தமிழ் தேசியத்திற்கு விரோதமான செயலையே செய்து வந்தது. கூட்டமைப்பு ஒற்றையாட்சிக்கு இணங்கி உள்ள போதிலும் , தமிழ் தேசிய நிலைப்பாட்டில் உள்ளவர்கள் , கூட்டமைப்புடன் ஒன்றிணைய வேண்டும் என கேட்பது விந்தையாக உள்ளது. ஒற்றுமைக்கும் ஒரு அர்த்தம் வேண்டும். அர்த்தமில்லாத ஒற்றுமை தேவையற்றது.
அதேவேளை உள்ளூராட்சி சபைகளில் அதிகூடிய ஆசனங்களை பெற்ற கட்சி ஆட்சியமைக்கவும் மக்கள் நலன் சார் செயற்பாடுகளுக்கும் நாம் எப்போதும் தடையாக இருக்க மாட்டோம் என மேலும் தெரிவித்தார்.