இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள ஒரு எரிமலை அதிக வெப்பத்துடன் சாம்பலை வெளிப்படுத்தி வருவதால் அப்பகுதியில் விமானங்களைப் பறக்கவிட வேண்டாம் என அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடலுக்கு நடுவே அமைந்துள்ள இந்தோனேசிய நிலப்பகுதியில் அதிகமான எரிமலைகள் உயிர்ப்புடன் உள்ளநிலையில் அவற்றில் சில வெடித்து நெருப்புக் குழம்பை வெளிப்படுத்தும் போது உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
இந்தநிலையில் தற்போது கடும் சீற்றத்துடன் காணப்படுகின்ற சினபங் மலை என்ற எரிமலை நேற்று முதல் அதிக வெப்பத்துடன் கூடிய சாம்பலை வெளிப்படுத்தி வருகின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் புகை மற்றும் சாம்பல் எரிமலையின் சுற்றுப்புற பகுதிகளில் 16 ஆயிரம் அடி தூரம் வரை பரவியுள்ளமையினால் எரிமலையைச் சுற்றி வசிக்கும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் எரிமலை எந்த நேரத்திலும் வெடித்து சிதறும் என்பதால் விமான நிறுவனங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எரிமலை வெடிப்புகள் காரணமாக அங்கு கடந்த 2016-ம் ஆண்டு 2 பேரும் 2014ல் 16 பேரும், 2016-ல் 76 பேரும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.