குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வட மாகாண சமூகசேவைகள், மகளிர் விவகார அமைச்சரின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு, கிளிநொச்சியில் சமூக சேவைகள் தொடர்பான மாபெரும் நடமாடும் சேவை நடைபெற உள்ளது. போரினால் பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் முல்லைத்தீவு, கிளிநொச்சி வாழ் மக்களின் நலன் கருதி வட மாகாண மகளிர் விவகாரம், சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரனின் ஏற்பாட்டில் அந்தந்த மாவட்ட செயலகத்துடன் இணைந்து சமூக சேவைகள் தொடர்பான மாபெரும் நடமாடும் சேவை நடைபெற உள்ளது.
நாளை சனிக்கிழமை (24.02.2018) அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் நடைபெறும் நிகழ்வில் பிரதம விருந்தினராக சமூக வலுவூட்டல், நலனோன்புகை மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவும் நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமை (25.02.2018) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெறும் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனும் ; பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்கள்.
இம் மாபெரும் நடமாடும் சேவையின் போது கிழ்க்காணும் சேவைகள் வழங்கப்பட உள்ளது.
மூக்கு கண்ணாடி வழங்குதல்
மாற்றுத்திறனாளிகளுக்கான சுயதொழில் உதவி
மாற்றுத்திறனாளிகளுக்கான வீடு திருத்தம்
மாற்றுத்திறனாளிகளுக்கான மலசலகூட வசதிகளை வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணம் வழங்கல்
பூர்த்தி செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மலசலகூடத்திற்கான காசோலை வழங்கல்
பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான சுயதொழில் உதவி
மாற்றுத்திறனாளியாக உள்ள பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு கல்விக்கான உதவி
முதியோர் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளல்
நலிவுற்றோருக்கான தற்செயல் நிவாரணம் மற்றும் சுயதொழில் ஊக்குவிப்புக் கொடுப்பனவு
குறித்த மாவட்டங்களில் உள்ள இத்தேவைகளை உடையோர் இச் சந்தர்ப்பத்தை தவறவிடாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கபடுகின்றது. வட மாகாண சமூக சேவைகள் அமைச்சு, வட மாகாண சமூக சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் நெறிப்படுத்தலிலும் மத்திய அரசின் சமூக சேவைகள் திணைக்களம், அங்கவீனமுற்றோருக்கான தேசிய செயலகம், முதியோர்களுக்கான தேசிய செயலகம் என்பவற்றின் பங்குபற்றலுடனும் இவ் நடமாடும் சேவை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.