எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்வதற்காக தொடர்ந்து போராடப் போவதாக . கூட்டு எதிர்க்கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் வழங்காமல் சபாநாயகர் ஜனநாயக விரோதமாக செயற்பட்டுக்கொண்டு வருகிறார் எனவும் தெரிவித்த அவர், அரசாங்கம் மக்களின் ஆணையை இழந்துள்ளமையால், உடனடியாக பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலை நடத்தி புதிய ஆட்சியை கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அவர் இதுதொடர்பில் மேலும் விபரிக்கையில், “நாங்கள் அடுத்தகட்டமாக அரசியல் ரீதியில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றோம். குறிப்பாக தேவையான நேரத்தில் அவசியமான திட்டங்களை நாங்கள் முன்னெடுப்போம். அதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். மக்களின் ஆணை மஹிந்த தரப்பிற்கே கிடைத்திருக்கின்றது. எனவே தற்போதைய அரசாங்கத்தினால் தொடர்ந்து பயணிக்க முடியாது.
இதேவேளை “பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டு எதிரணிக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். சபாநாயகர் இந்த விடயத்தில் ஜனநாயக ரீதியில் செயற்படவேண்டும். பாராளுமன்ற சம்பிரதாயங்களின்படி எண்கணிதம் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். எண்கணிதம் என்பது இந்த முழு உலகத்தினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும்.
எனவே எண்கணித ரீதியாக பார்க்கும் போது பாராளுமன்றத்தில் கூட்டு எதிரணிக்கே அதிகளவு எம்.பி.க்கள் இருக்கின்றனர். எனவே எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டு எதிரணிக்கே வழங்கப்படவேண்டும்.
தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்கின்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பைவிட மூன்று மடங்கிற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களை கூட்டு எதிரணி வைத்திருக்கின்றது. எனவே இந்த விடயத்தை கவனத்தில் கொண்டு சபாநாயகர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டு எதிரணிக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். எவ்வாறிருப்பினும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்வதற்காக கூட்டு எதிரணி தொடர்ந்து செயற்படும் என்பதை உறுதியாக தெரிவிக்கின்றோம்” எனக் கூறியுள்ளார்.