Home உலகம் சில அரசியல்க் கட்சிகள் நாங்கள் இந்தியாவுடன் கிட்டிய உறவைப் பேணுவதை விரும்புகின்றார்கள் இல்லை

சில அரசியல்க் கட்சிகள் நாங்கள் இந்தியாவுடன் கிட்டிய உறவைப் பேணுவதை விரும்புகின்றார்கள் இல்லை

by admin

தமிழ் மக்கள் பேரவை – விசேட கூட்டம்

தமிழ் மக்கள் பேரவை தனது வேகத்தைக் கூட்டிப் பயணிக்க வேண்டிய தருணம் தற்போது உருவாகியுள்ளது. சென்ற முறை நாம் கூடிய போது தேர்தல்கள் விரைவில் நடைபெற இருப்பதாகக் கூறினோம். ஆனால் தேர்தலில் தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கம் என்ற ரீதியில் பக்கச் சார்பற்று விளங்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் எம்முடன் இருக்கும் கட்சிகள் தேர்தலில் கலந்து கொண்டதை தமிழ் மக்கள் பேரவை எதிர்க்கவில்லை. தேர்தல் முடிவுகளின் படி எமது இயக்கம் வெளியிட்டு வந்த கருத்துக்கள், கொள்கைகளை மக்கள் போதிய அளவு ஏற்றுக் கொண்டதாக தெரியவந்துள்ளது. இது எமது கொள்கைகளுக்கு வெற்றி என்றே கூற வேண்டும். அதாவது எம்முடன் சேர்ந்திருந்த சேர்ந்திருக்கும் கட்சிகளின் வெற்றிகள் ஒருபுறமிருக்க இயக்கமான எமக்கும் கடந்த தேர்தல் சில உண்மைகளைப் புலப்படுத்தியுள்ளது. ஏனெனில் தமிழ்த் தலைமைத்துவம் தாம் கூறுவதையே மக்கள் என்றும் போல் ஏற்க வேண்டும் என்று தேர்தலின் போது கூறிவந்தது. எம்மைத் தீவிரப் போக்குடையவர்கள் என்று போட்டுடைத்தது. ஆனால் கணிசமான அளவு மக்கள் அவர்கள் கருத்துக்களை நிராகரித்தார்கள். இதன் பொருட்டு தமிழ்த் தலைமைகளின் தற்போதைய கருத்துக்கள் முற்றிலும் மாறிவருவதை நாம் காண்கின்றோம். எம்மைத் தீவிர போக்குடையவர்கள் என்று குறை கண்டுபிடித்தவர்கள் இப்பொழுது தாமும் அதே கொள்கைகளை, கருத்துக்களை வெளிக்கொணர்ந்து கொண்டிருக்கின்றனர். வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டும் என்கின்றார்கள், சுயாட்சி வேண்டும் என்கின்றார்கள், தேசியம் பேசுகின்றார்கள், சமஷ;டி வேண்டும் என்கின்றார்கள். வீம்பில் பேசிய சிலர் தொடர்ந்து நாம் கூறிவந்த கருத்துக்களை இப்பொழுது விடாப்பிடியாகப் பற்றிக் கொண்டிருக்கின்றார்கள் போல்த் தெரிகின்றது.

ஆனால் தமிழ் மக்கள் பேரவை கட்சித் தலைமைத்துவங்களின், தமிழ்த் தலைமைத்துவங்களின் எழுச்சி வீழ்ச்சிகளுடன் சம்பந்தப்பட்ட ஒரு இயக்கம் அல்ல. அதற்கு கட்சி ஒழுங்கமைப்பு இல்லை, ஆனால் நிர்வாக ஒழுங்கமைப்பு உண்டு. கட்சி எதிர்பார்ப்புக்கள் இல்லை, ஆனால் தமிழ் மக்கள் அனைவரதும் எதிர்பார்ப்புக்களும் எமது எதிர்பார்ப்புக்களே. கட்சிகளின் ஆதரவாளர்கள் கட்சியையே முதன்மைப் படுத்துகின்றார்கள். பேரவையின் ஆதரவாளர்கள் பல கட்சிகளையும் சேர்ந்தவர்கள். ஆனால் கொள்கை ரீதியில் ஒன்றுபட்டவர்கள். அவ்வாறான கொள்கை ரீதியான ஒற்றுமையே இப்பொழுது முரண்டு பிடித்த எமது தமிழ்த் தலைமைகளையும் எம் மொழியைப் பேசவைத்துள்ளன. ஆனால் அதற்கான காரணங்கள் பல இருக்கலாம். அரசியல் ஆய்வாளர்கள் அவற்றைக் கண்டுபிடிப்பார்கள் என்று நம்புகின்றேன். தலைமைகள் யதார்த்தத்தை நோக்கிப் பயணிப்பது வரவேற்கத் தக்கதே.

தமிழ் மக்கள் பேரவை எம் மக்களை ஒன்று சேர்ப்பது, புரிந்துணர்வுடனான அவர்களின் குரல்களை ஒலிக்கச் செய்வது, தமிழ் மக்களின் குற்றம் குறைகளை எடுத்துக்காட்டி எம்மை நாமே முன்னேற்றிச் செல்வது, அரசியல் ரீதியாக எமது உரித்துக்களைப் பெறப் போராடுவது, உலகத் தமிழ் மக்களிடையே ஒற்றுமையை உண்டாக்குதல் போன்ற பல குறிக்கோள்களை முன்வைத்து மிக அமைதியாக முன்னேறி வருகின்றது.

அந்த வகையில் எமது இளைஞர்களை ஒன்று சேர்க்கும் ஒரு பாரிய பொறுப்பு எம்மேல் சுமத்தப்பட்டுள்ளது. படித்த, பட்டம் பெற்ற, பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறப் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகளும், படிப்பை இடைநிறுத்தி வேலைகளுக்காக அலைந்து திரியும் இளைஞர் யுவதிகளும், விவசாயம், மீன்பிடி போன்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் இளைஞர் யுவதிகளும் இன்னும் பல இள நெஞ்சங்களும் ‘உங்கள் தமிழ் மக்கள் பேரவைக்கு எப்பேர்ப்பட்ட ஆதரவை நாம் வழங்கலாம்’ என்று கேட்டு வருகின்றார்கள். சில மாதங்களுக்கு முன்னர் என்னை வட மாகாண சபையில் இருந்து வெளியேற்ற நடவடிக்கைகள் எடுத்த போது வந்து என்னைச் சந்தித்து தமது ஆதரவை நல்கிய பெரும்பான்மையான இளைஞர் குழாம்கள் எம்மோடு இணைந்து பயணிக்க நாட்டம் கொண்டுள்ளனர். அவர்களை ஒன்றிணைக்க எனக்கு அவகாசம் கிடைக்கவில்லை. எனினும் தொடர்ந்து அவர்கள் தமது கருத்துக்களை எனக்கு வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

தற்போது எமது இளைஞர் அணிகளை உருவாக்க தக்க தருணம் வந்துள்ளது. வட கிழக்கு மாகாணங்களில் இளைஞர் அணிகளை ஒன்று சேர்க்கவும் அவர்களுக்கு எமது தமிழ் மக்கள் பேரவையூடாக போதிய அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வேண்டியுள்ளது. அதன் பொருட்டு எம்மிடையே போதிய கரிசனை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். பெண்கள் மத்தியிலும் இளைஞர் யுவதிகள் மத்தியிலும் நல்லெண்ணத்தைப் பெற்றுள்ள கௌரவ மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசீதரன் அவர்கள் இங்கு வந்துள்ளார். பெண்கள், இளைஞர், யுவதிகள் சார்பான அவரின் உதவி எமக்கு எப்பொழுதும் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. கல்லூரி அதிபராகக் கடமையாற்றிய இளைஞர் யுவதிகள் மத்தியில் நல்லெண்ணத்தைப் பெற்றுள்ள திரு.அருந்தவபாலன் அவர்களும் இன்று இங்கு வந்துள்ளார்கள். அவர்கள் போன்றவர்களும் எமக்கு போதிய உதவிகளை நல்கலாம் என்று எதிர்பார்க்கின்றோம்.

பசுமை இயக்கத்தில் ஊறியிருக்கும் முன்னைய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவர்களும் இங்கிருக்கின்றார். வட கிழக்கு மாகாணங்கள் பல மரங்களையும் விருட்சங்களையும் யுத்தத்தின் போது இழந்து விட்டன. உடனே இழந்த மரங்களுக்குப் பதிலாக புதிய மரங்கள் நாட்டி ஒரு பசுமைப்புரட்சியை ஏற்படுத்த வேண்டியுள்ளது. அவரின் பசுமை இயக்கம் எம்முடன் சேர்ந்து இந்தக் கைங்கரியத்தில் ஈடுபட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். ஒழுங்குபடுத்துவதில் அவரின் திறனை நான் அவதானித்துள்ளேன். இளைஞர் யுவதிகள் மத்தியிலும் அவருக்கு நல்லெண்ணம் உண்டு. அவரும் எமக்கு உதவியாய் இருப்பார் என்று நம்புகின்றோம்.

இன்றைய சூழலில் எமது மக்களிடையே புதியதொரு கலாசாரத்தை உண்டுபண்ண வேண்டிய ஒரு கடப்பாடு எம்மைச் சார்ந்துள்ளது. கட்சிகளுக்கு அடிமைப்படாது தமிழ் மக்கள் முன்னேற்றத்தையே குறிக்கோளாகக் கொண்டு சேவையில் ஈடுபட வேண்டியுள்ளது. இளைஞர் யுவதிகளுக்கு ஆற்றல் அளிக்கும் செயற்றிட்டங்களை உருவாக்க வேண்டும். உதாரணத்திற்கு பல துறைகளில் தகைமையும் திறனும் அடைய புலமைப் பரிசில்கள் பல நாடுகளால் வழங்கப்படுகின்றன. அவற்றை எம் மக்கள் பாவிக்க முன்வரலாம். அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை எமது பேரவை எடுக்கலாம். உதாரணத்திற்கு இந்தியா தனது புலமைப்பரிசில்களை எமது இளைஞர் யுவதிகள் போதியவாறு பாவிப்பதில்லை என்று அங்கலாய்க்கின்றது. இது பரிசீலிக்கப்பட வேண்டும்.

சில அரசியல்க் கட்சிகள் நாங்கள் இந்தியாவுடன் கிட்டிய உறவைப் பேணுவதை விரும்புகின்றார்கள் இல்லை. தமிழ் மக்களுக்கு போரின் கடைசி நாட்களில் நடந்தவற்றிற்கு இந்தியாவும் பொறுப்பு என்ற முறையில் அவ்வாறான ஒரு எண்ணம் அவர்களுக்கு இருக்கலாம். ஆனால் அன்றைய நிலை வேறு. இன்றைய நிலை வேறு. இந்தியாவின் அனுசரணை இல்லாமல் வட கிழக்குத் தமிழ் மக்கள் தமது நியாயமான குறிக்கோள்களை அடைய முடியாது என்ற எண்ணம் கொண்டவர்களும் எம்முள் இருக்கின்றார்கள். ஆகவே எம்மிடையே இது பற்றிய கருத்து வேறுபாடுகளை முடிந்தளவு நீக்குவது அவசியமாகின்றது. எல்லா விடயங்களிலும் எம்மிடையே கருத்தொருமிப்பு ஏற்பட முடியாது. ஆனால் ஒருவர் ஒருவர்க்கான கருத்துக்களைப் புரிந்து கொண்டு முன்னேறலாம்.

எமது தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சியாக மாறுமா என்ற கேள்வி மேலும் மேலும் எம்மிடம் கேட்கப்படுகிறது. ஒரு மக்கள் இயக்கம் கட்சிக் கட்டுக்கோப்புக்களில் சிலவற்றைப் பின்பற்றலாம். ஆனால் கட்சியாக மாறிவிடக் கூடாது. அதனால்த்தான் நாங்கள் சென்ற தேர்தலின் போது எமது கொள்கைகளை, நோக்குகளைக் கட்சிகள் வெளிக்காட்டுவதை வரவேற்றோம். ஆனால் நாங்கள் அவர்களுடன் சேர முன்வரவில்லை. மக்கள் இயக்கத்தைக் கட்சிகள் ஆதரிக்கலாம். கட்சிகளை மக்கள் இயக்கம் ஆதரித்தால் அது மக்கள் இயக்கமாக இருக்க இலாயக்கற்றதாகிவிடும். ஒவ்வொரு கட்சிக்கும் ஏதோ ஒரு அடையாளம் உண்டு. வரலாறு உண்டு. மக்களிடையே மக்கள் இயக்கத்திற்கு இருக்கும் அடையாளம் வேறு. நாம் கட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். மக்களுடன் நேரடியாகத் தொடர்பை ஏற்படுத்த விரும்புபவர்கள். மக்களின் சேவையொன்றே எமது இயக்கத்தின் குறிக்கோள். எந்த நன்மைகளையும் எமது இயக்கம் எவரிடமும் எதிர்பார்க்காது. ஆனால் எம்மைத் திறம்பட நடாத்த எம் மக்கள் தரும் கொடைகளே எம்மை வழிநடத்துவன.

இந்த அடிப்படையில் நாங்கள் மத்திய குழுவாக இங்கு இன்று கூடியிருக்கும் அதே வேளையில் எமது குறிக்கோள்களை நெறிப்படுத்தும் போது கட்சி அரசியல் சார்பற்ற ஒரு சிலரை செயற்குழுவாக நியமித்து அவர்கள் ஊடாக தீர்மானங்களை எடுத்தால் நல்லது என்று அபிப்பிராயப்படுகின்றோம். மத்திய குழு இன்றிருப்பது போல் தொடர்ந்து இருக்கும். இன்று வந்திருக்கும் மூவரையும் உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் மத்திய குழுவினுள் உள்ளடக்கலாம். எமது மத்திய குழு முன்போல காலத்திற்கு காலம் கூடும். ஆனால் எங்களுள் இருந்து ஒரு சிலரை செயற்குழுவுக்கு நியமிக்க உத்தேசித்துள்ளோம். இந்தக் குறைந்த தொகையினர் வேண்டும்போது மாதாமாதம் கூடலாம். மத்திய குழு அங்கத்தவர்கள் வேண்டும்போது தமது அறிவுரைகளை எமக்கு வழங்கலாம். ஆனால் இறுதித் தீர்மானங்கள் இந்த செயற்குழுவையே சாரும். நிர்வாகத் திறன் கருதியும், குறைந்தோர் கூடிய கெதியில் கூட முடியும், தீர்மானங்களை எடுக்க முடியும் என்ற காரணத்தாலும், தீர்மானங்களைக் கட்சி அரசியல் சார்ந்து எடுக்காமல் இயக்கத்தின் குறிக்கோள்களை மையமாக வைத்து எடுக்கவும் இந்த வழிமுறை பலனளிக்கும் என்று எண்ணுகின்றோம்.

கட்சி அரசியல் வேறு, அரசியலில் நாட்டம் வேறு. முடிந்த வரையில் அரசியலில் நாட்டமும் கட்சி அரசியலில் வெகுவாக ஈடுபடாதிருப்பவர்களையே செயற்குழுவில் நியமிக்கக் கருதியுள்ளோம். எமது தேர்வு பின்வருவோரை உள்ளடக்கியுள்ளது. எங்களுள் 11 பேரை அடையாளங் கண்டுள்ளோம். தேர்தல்களுடனும் கட்சி அரசியலுடனும் வெகுவாக இணைந்த எமது சகோதர சகோதரிகளை நாம் செயற்குழுவிற்குள் சேர்க்கவில்லை.
பின்வருவோர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
1. வைத்திய கலாநிதி இலக்ஷ;மன் அவர்கள்
2. வைத்திய கலாநிதி சிவன்சுதன் அவர்கள்
3. பேராசிரியர் சிற்றம்பலம் அவர்கள்
4. பேராசிரியர் சிவநாதன் அவர்கள்
5. ஜனாதிபதி சட்டத்தரணி புவிதரன் அவர்கள்
6. கல்லூரி அதிபரும் ஊடகவியளாளருமான திரு.விஜயசுந்தரம் அவர்கள்
7. வணக்கத்திற்குரிய ஜெயபாலன் குரூஸ் அவர்கள்
8. திரு.ஜனார்த்தனன் அவர்கள்
9. திரு.வசந்தராஜா அவர்கள்
10. வைத்திய கலாநிதி கருணாகரன் அவர்கள்
இவர்களுடன் நானும் சேர்ந்துகொள்வேன். எல்லாமாகப் பதினொரு பேர்.
எங்கள் ஏற்பாட்டை எமது மத்திய குழு ஏற்றால் செயற்குழுவை இன்றே நியமித்து வேலைகளைத் தொடங்கலாம். எமது முதல் வேலையாக 18ந் திகதி காலை 10.00 மணிக்கு திருகோணமலையில் பொதுமக்களுக்கு அரசியல் ஞானம் புகட்டும் கூட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்தவுள்ளோம். ஏற்கனவே பேச்சாளர்களை அடையாளப்படுத்தியுள்ளோம். திரு.யோதிலிங்கம் அவர்கள் இணைப்பாட்சி பற்றியும், சிரேஷ;ட விரவுரையாளர் மு.வு. கணேசலிங்கம் அவர்கள் வட கிழக்கு இணைப்பு பற்றியும், சிரேஷ;ட சட்டத்தரணி மு.ளு.இரத்னவேல் அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை பற்றிய பிரேரணை பற்றியும் பேச இருக்கின்றார்கள். எமது மக்களை ஒன்றிணைத்து அந்தக் கூட்டத்திற்கு கொண்டுவர நீங்கள் ஒவ்வொருவரும் உதவ வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் கூட்டத்திற்கு வருவீர்கள் என்றும் எதிர்பார்க்கின்றோம்.

தமிழ் மக்கள் பேரவை தொடர்ந்து எம் மக்களின் விமோசனத்தில் கரிசனை காட்ட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் ஒவ்வொருவரும் தாங்கள் மக்கள் சேவையில் எவ்வாறு இறங்க முடியும் என்று எமக்குத் தெரியப்படுத்தினால் நல்லது. உதாரணமாக எமது வைத்தியர்கள் ஒரு ½ நாள் இலவச வைத்திய முகாம் ஒன்றை நடாத்த நடவடிக்கைகள் எடுக்கலாம். நாங்கள் வெறுமனே அரசியல் பேசுவதால் மக்களுக்கு நன்மை ஏற்படாது. அரசியல் ஞானமும் பொருளாதார நன்மைகளையும் அவர்கள் பெற வேண்டும். இதற்காக நாங்கள் ஒவ்வொருவரும் பாடுபடுவோமாக என்று கூறி எனது இணைத்தலைவருரையை இத்துடன் முடித்துக் கொள்கின்றேன்.
நன்றி
வணக்கம்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
இணைத்தலைவர்
தமிழ் மக்கள் பேரவை

Spread the love

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More