வாரத்துக்கொரு கேள்வி – 09.03.2018
இவ் வாரத்தையக் கேள்வி தற்போது தெற்கில் எல்லோர் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருக்கும் சம்பவங்கள் பற்றியது.
கேள்வி: கிழக்கு மாகாணத்திலும் மத்திய மாகாணத்திலும் நடைபெற்று வரும் வன் செயல்கள் பற்றி உங்கள் கருத்தென்ன?
பதில்: இவ்வாறான வன் செயல்கள் இலங்கையில் புதிதல்ல. பெரும்பான்மையினத்தினர் சிறுபான்மையினத்தினர் மீது கட்டவிழ்த்து விடும் வன் செயல்களே இவை என்பதிலும் பார்க்க நான் வேறு கோணத்தில் இருந்தும் பார்க்கின்றேன். குற்றம் புரிந்தவர்களை அல்லது குற்றம் புரிந்ததாகச் சந்தேகப்படுபவர்களை சமுதாயமானது, நீதி, சட்டம் போன்றவற்றின் கண் கொண்டு பார்க்க வேண்டுமேயொழிய சாதி, சமூக, மத, மொழி வாரியான கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது. இரு இளைஞர்கள் சேர்ந்து இன்னொரு இளைஞரைக் கொலை செய்தார்கள் என்பதே டிகனவிலிருந்து நாம் கேட்ட செய்தி. உடனே பொலிசார் உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன? கொன்ற இளைஞர்கள் முஸ்லிம்கள் என்பதும், கொல்லப்பட்டவர் சிங்களவர் என்றும் கதை பரவியதால் இளைஞர்களுக்கிடையில் நடைபெற்ற மோதல் இனங்களுக்கிடையில் நடைபெற்ற மோதலாகச் சித்திரிக்கப்பட்டு இன முறையிலான போராட்டமாக மாறியது. இவ்வாறான செயல்கள் நடக்காதா என்று ஏங்கியிருந்தவர்களுக்கு இது கொழுக்கட்டை கொடுத்ததாக ஆகிவிட்டது. குற்றவாளிகளை அவர்களின் இனத்தவர் எமது மக்கள் என்றோ எம்மவர் என்றோ எண்ணி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அது இன முறுகல்களையும், மோதல்களையும், கோபதாங்களையும் உண்டாக்குகின்றன.
நடந்து முடிந்த வட கிழக்கு மாகாணப் போரில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் நம்மவர்கள் என்று உயர் அரசியல்வாதிகள் அடையாளப்படுத்தியதால்த் தான் இன்று நிலைமை சர்வதேச மட்டத்திற்குச் சென்றிருக்கின்றது.
இராணுவமோ, கடற்படையோ, விமானப்படையோ தம்முள் குற்றம் இழைத்தவர்களைத் தாமே இனம் கண்டு அவர்களைத் தமது படைகளில் இருந்து நீக்கி அப்போதே தண்டனைக்குள்ளாக்கியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததற்குக் காரணம் அரசியல் உள்ளீடுகளே.
நடப்பது என்ன? சட்டத்தையும் ஒழுங்கையும் நாட்டில் சமாதானத்தையும் நிலைநாட்ட அல்லது உருவாக்க வேண்டியவரான அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் கூட குற்றஞ் செய்தோரைத் தமது இனத்துடன் அடையாளப்படுத்தி அவர்களை ஒருபோதும் தண்டனை அனுபவிக்க விடமாட்டேன் என்று வெளிப்படையாகக் கூறி வந்துள்ளார், கூறி வருகிறார். எனவே குற்றம் புரிந்தவன் என்ன நினைக்கின்றான்? நான் எது செய்தாலும் எனக்கு ஜனாதிபதியும், அரசாங்கமும், அரசியல்வதிகளும் உடந்தையாக இருப்பார்கள். ஆகவே தொடர்ந்து நான் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவரலாம் என்று சிந்திக்கின்றான்.
பொலிசார் என்ன நினைக்கின்றார்கள்? நாம் அரசியல்வாதிகள் நினைப்பது போல் அல்லது கோருவது போல் செயற்பட்டால் எமது உத்தியோக வாழ்க்கையிலும் தனி வாழ்க்கையிலும் நன்மை பெறலாம். சட்டத்தைக் கடைப்பிடித்து நடந்தோமானால் அரசியல்வாதிகள் எம்மை தண்ணியில்லாக் காட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என்றே சிந்திக்கின்றார்கள்.
எனவே அரசியல்வாதிகளின் ஒரு தொலைபேசி அழைப்புப் போதும் பொலிசார் தமது கடமையைச் சட்டப்படி செயற்படுத்தாதிருக்க!
அரசியல் ரீதியாக சிலர் சந்தர்ப்பங்களையும் தருணங்களையும் எதிர்பார்த்திருந்ததையும், எதிர்பார்த்திருப்பதையும் நாம் உணர வேண்டும். 1983ல் வடமாகாணத்தில் யுத்தத்துடன் சம்பந்தப்பட்ட செல்லக்கிளி சம்பந்தமான ஒரு நிகழ்வு நடக்க அவ்வாறான செயல்களை எதிர்பார்த்திருந்த ஒரு தெற்கத்தையக் குழுவினர் உடனே கொழும்பு பொரளையில் செயல்படத் தொடங்கி விட்டார்கள். பொரளையிலும் அரசியல் பேசியது. அரசியல்வாதிகள் தெரிந்தும் தெரியாதது போல் வாளாதிருக்க பொலிசார் முன்னிலையிலேயே அனர்த்தங்கள் நிகழ்ந்தன. பல வீடுகள் சூறையாடப்பட்டன. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. அவை தீ வைக்கப்பட்டன. தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் எத்தனையோ நிகழ்வுகள் பொரளையில் இருந்து தொடர்ந்து மேல் மாகாணம் பூராகவும் நடந்தன. அதற்கப்பாலும் நடந்தன. பொரளையில் இவ்வாறான ஒரு நிகழ்வு நடந்ததெனத் தெரிந்தவுடன் பொலிசார் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எடுக்கவில்லை. எடுக்காததற்குக் காரணம் அரசியல்வாதிகளின் குறுக்கீடு.
அன்று அப்பாவித் தமிழ் மக்களுக்கு நடந்தது இன்று அப்பாவி முஸ்லீம் மக்களுக்கு நடக்கின்றன. இதற்கு அரசியல் உள்ளீட்டையே நான் குறை கூறுவேன்.அன்று தமிழ் மக்கள் அரச சேவையில் பெரும்பாலும் இணைந்துள்ளார்கள் என்பதால் ‘சிங்களம் மட்டும்’ சட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததும் 1958ம் ஆண்டின் கலவரங்கள் வெடித்தன. தமிழ் மக்கள் தமது ஆற்றாமையால் 1976ம் ஆண்டில் வட்டுக்கோட்டைப் பிரகடனத்தைக் கொண்டு வந்ததால் அதன் எதிரொலியாகவே திட்டமிட்டு 1983ம் ஆண்டில் கலவரங்கள் காடையர்களால் முடுக்கி விடப்பட்டன. பின்னணியில் அரசியல்வாதிகள் இருந்தனர். 1981ம் ஆண்டு யாழ் நூலகம் எரிந்த போதும் அரசியல்வாதிகளே காரணமாக இருந்தார்கள். ஒரு அரசியல்வாதி மது போதையில் யாழ் அரச விடுதியில் இருந்து கொண்டு ‘முள்ளந்தண்டு நிமிர்ந்த ஒரு சிங்களவனாவது இங்கில்லையா?’ என்று சிங்கள மொழியில் கேட்டிருக்கின்றார். உடனே இராணுவ வீரர்கள் சிலர் போய் யாழ் நூலகத்திற்குத் தீ வைத்திருக்கின்றார்கள். எனக்கு இதை அடுத்த நாட் காலை சாவகச்சேரி பொலிசார் (சிங்களப் பொலிஸ் அத்தியட்சகர்) கூறினர். நான் அப்போது சாவகச்சேரி மாவட்ட நீதிபதி.
இன்று முஸ்லீம்களுக்கு எதிராக செயற்படுவதின் காரணம் இரண்டு என நினைக்கின்றேன். ஒன்று முஸ்லீம் சகோதரர்கள் வாணிபத்தில், வணிகத்தில் கொடிகட்டிப் பறக்கின்றார்கள். அதனை தொடர்ந்து நடக்க விடப்படாது. அன்று தமிழர்கள் அரச சேவையில் கொடிகட்டிப்பறக்கின்றார்கள். விடக் கூடாது என்று நினைத்தார்கள். இன்று முஸ்லீம்கள் வாணிபத்தில் கொடிகட்டிப் பறக்கின்றார்கள் என்று ஆதங்கம். அதனால்த்தான் அவர்களின் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அடுத்த காரணம் சனப்பெருக்க வீதம் சுமார் 5 சதவீமாக முஸ்லீம் மக்கள் பெருகி வர, சிங்களவரின் பெருக்கம் சுமார் 2 சதவீதம் என்றும் தமிழ் மக்களின் ஜனப் பெருக்கம் 1 சத வீதம் என்றும் கூறப்பட்டு வருகிறது. அதற்கேற்றாற் போல் சில அரசியல்வாதிகள் 2040ல் நாமே இலங்கையின் பெரும்பான்மையினர் என்று வெளிப்படையாகக் கூறி வருகின்றார்கள். தற்போது பொருளாதார ரீதியாக முஸ்லீம் சமூகம் பாதிப்படைந்துள்ளது. இறப்புக்கள் அதிகமில்லை. தொடர்ந்து இவ்வாறான செயல்கள் முஸ்லீம் சமூகத்தினருக்கு எதிராக வருங்காலத்தில் நடைபெறப் போகும் சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. அடுத்த முறை உயிர்ச்சேதம் வெகுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இவ்வாறான செயல்கள் இனப் பிரச்சினையாக மாறாதிருக்க பொலிசார் போதிய பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பொலிஸ் படையினர் அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் இயங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுதந்திரமான பயிற்சி பெற்ற, பக்கச் சார்பற்ற பொலிஸ் படையினரை நாம் உருவாக்க வேண்டும். ஒரு கூட்டுத்தாபன அந்தஸ்தில் பொலிஸ் படை இயங்க நாம் ஆவன செய்ய முடியாதா என்று பரிசீலித்துப் பார்க்க வேண்டும். கொள்கைகளை அரசாங்கம் பொலிஸ்மா அதிபருக்குத் தெரியப்படுத்தலாம். நடைமுறைப்படுத்தல் அவர் வசமும் மற்றைய உப பொலிஸ் அதிபர்கள் வசமும் இருக்க வேண்டும். தேர்தல் ஆணையாளர் போன்று சுதந்திரமாக பொலிஸ்மா அதிபர் நடந்து கொள்ள இடமளிக்க வேண்டும்.
யாழ் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் 80களில் ஒரு கொலை நடைபெற்றது. ஒரு கிராமத்தில் நடந்த சாதிச் சண்டையினுள் தன் நண்பனைக் காப்பாற்ற உள் நுழைந்த, இரு சாதியருக்குஞ் சம்பந்தப்படாத, ஒருவர் தற்பாதுகாப்பாக அவர்களுள் ஒருவரைக் கொன்று விட்டார். பார்த்த சாட்சியங்கள் இருந்தன. பாவிக்கப்பட்ட கத்தி பொலிசாருக்குக் கிடைத்திருந்தது. சந்தேக நபர் நீதவான் முன்னிலையில் ஆஜர் ஆக்கப்பட்டார். பொலிசாரின் கோரிக்கையை ஏற்று சந்தேக நபர் விளக்க மறியலில் வைக்கப்பட்டார். நீதவான் தன் முன்னிருந்த சந்தேக நபர் தனது நெருங்கிய சொந்தக்காரர் என்பதை அடையாளம் கண்டிருந்தார். விளக்க மறியலில் வைத்த பின் அரசியல்வாதிகள், உறவினர்கள், சட்டத்தரணிகள், நண்பர்கள் என்று பலர் சந்தேகநபருக்கு பிணை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். எதற்கும் அசையவில்லை நீதவான். ஆறு மாதங்களுக்கு விளக்க மறியலில் இருந்த கைதியை ஆறு மாதங்களுக்குப் பின்னர் அரச பகுப்பாளர் அறிக்கை கிடைத்த பின் பிணையில் செல்ல நீதிபதி அனுமதித்தார். வெளிவந்த ஒரு வாரத்தினுள் கைதி கொலை செய்யப்பட்டார். உண்மையில் அதுவரையில் குறித்த கைதியை நீதிபதிதான் உயிருடன் இருக்க உதவினார் என்று கூடக் கூறலாம்.
அரசியல்வாதிகளின் அல்லது உறவினர்களின் கோரிக்கையைக் கேட்டு முன்னரே பிணை அளித்திருந்தால் கைதி ஏற்கனவே கொலை செய்யப்பட்டிருப்பார் என்று கொள்ள இடமிருக்கின்றது. ஆனால் சாதிச் சண்டையும் தீ மூட்டலும் உருவாகாது தடுத்தார் நீதிபதி. வன் செயல்கள் உருவாக அரசியலும் அரசியல்வாதிகளுமே காரணமாக இருக்கின்றார்கள் என்பதே என் கருத்து. வருங் காலத்தில் தமிழர்களுக்கு ஏற்பட்டது போன்று மீண்டும் மீண்டும் இவ்வாறான கலவரங்கள் முஸ்லீம் மக்களுக்கு எதிராக ஏற்பட வாய்ப்பிருக்கின்றது. தமிழர்கள் போன்று முஸ்லீம் மக்களும் சிங்களப் பிரதேசங்களில் இருந்து மேலும் மேலும் துரத்தப்படுவார்கள். இதற்காகத் தான் நாடு பூராகவும் சமஷ்டி அடிப்படையிலான தன்னாட்சி உரித்தை ஒன்பது மாகாணங்களுக்கும் வழங்க வேண்டும் என்று கேட்டு வருகின்றேன். அப்பொழுது தமிழ்ப் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பிரதேசங்களில் பெரும்பான்மையினர் கொடுமைகள் நடக்கமாட்டா. ஆனால் தமிழரோ, முஸ்லீம்களோ, மலையகத் தமிழரோ தம் மத்தியில் வசிக்கும் சிங்கள மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்