குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெண் உறவினர்களை ஆண் காவல்துறையினர் தள்ளியதால் போராட்டகாரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. ஜனாதிபதியின் பயணத்தினை முன்னிட்டு யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முன்னதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்த காவல்துறையினர் ;ஜனாதிபதியுடன் சந்திப்பினை மேற்கொள்ள ஏற்பாடு செய்து தருவதாக வாக்குறுதி அளித்து அமைதியாக இருக்குமாறு கோரினார்கள். அதனை அடுத்து உறவினர்கள் அமைதியாக வீதியோரமாக நின்றிருந்தனர்.
இந்தநிலையில் காவல்துறையினரால் அழைத்து செல்லப்பட்டவர்கள் ஏமாற்றப்பட்டு ஜனாதிபதியை சந்திக்காமல் திரும்பியதனால் உறவினர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. நிகழ்வு முடிந்து வெளியேறிய ஜனாதிபதியை வீதியில் மறிக்கும் நோக்குடன் வீதிக்கு வந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்களை அங்கு கடமையில் நின்ற ஆண் காவல்துறையினர் தள்ளினார்கள்.
இதனைத் தொடந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள் . பெண்களை பிடித்து ஆண் காவல்துறையினர் தள்ளியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினருடன் வாக்குவாதப்பட்டனர். ஜனாதிபதி சென்றதும் காவல்துறையினர் போராட்டகார்கள் நின்ற இடத்தை விட்டு உடனே அகன்று சென்றனர்.
இன்றையதினம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் நடைபெற்ற இடத்தில் பெண் ஆண் காவல்துறையினர் எவரும் கடமையில் ஈடுபட்டு இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது