சிரியாவின் அணு உலையை குண்டு வீசி தகர்த்தமையை 10 வருடங்களின் பின்னர் இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள அல்-குபர் அணு உலை தரைமட்டம் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே தற்போது இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது
வடகொரியாவின்; தொழில்நுட்பத்துடன் சிரியா ரகசியமாக அணு ஆயுதங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா மற்றும் அதன் நேசநாடுகள் குற்றம்சாட்டி வந்தநிலையில் குறித்த அந்த அணு உலை செயல்பாட்டுக்கு வருவதற்கு சிலநாட்களுக்கு முன்னர் விமானத் தாக்குதல் மூலம் முழுதாக அழிக்கப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என சிரியா அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த போதும் இஸ்ரேல் மறுப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையயில் குறித்த அல்-குபர் அணு உலை மீதான தாக்குதலை தாம்தான் மேற்கொண்டது என இஸ்ரேல் இன்றையதினம் அறிவித்துள்ளது
தமது விமானப்படையை சேர்ந்த 8 அதிநவீன போர் விமானங்கள் குண்டுகளை வீசி அந்த கட்டிடத்தை அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பான ஆவணங்களையும், புகைப்படங்களையும், தாக்குதல் நடத்திய போர் விமானங்கள் மூலம் எடுத்த வீடியோ பதிவுகளையும் இஸ்ரேல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்த தகவல் வெளியான பின்னர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள இஸ்ரேல் உளவுத்துறை அமைச்சர் அணு ஆயுதங்களை வைத்து மிரட்ட நினைப்பவர்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்பதை இஸ்ரேல் தெளிவுப்படுத்தி உள்ளது என குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது