ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை தங்களது போராட்டம் தொடரும் என போராட்டக்குழு அறிவித்துள்ளது.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அ.குமரெட் டியாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து 43 நாட்களாக அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் பங்கேற்ற பொது மக்கள் அனைவரும் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய அட்டையை ஏந்தியிருந்தனர்.
பொதுமக்களின் இந்த போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தநிலையில் ஆலை விரிவாக்கம் விவகாரத்தில் அரசு தலையிட்டு உறுதியான நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் கடலில் கலப்பதால் மீன்வளம் பாதிக்கப்படுகிறது எனவும் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில் தினமும் இதற்காக ஒரு கோடியே 5 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த ஆலைக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தமிழில் வழங்கப்படவில்லை எனவும் இந்த திட்டத்தினால் அதிக காற்று மாசு உள்ள நகரமாக தூத்துக்குடி உருவெடுத்து உள்ளதெனவும் அங்கு புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.