Home இலங்கை ஆனந்த சுதாகரனின் வழக்கு தொடர்பான முழு விபரங்களையும் அறிக்கையிடுமாறு உத்தரவு…

ஆனந்த சுதாகரனின் வழக்கு தொடர்பான முழு விபரங்களையும் அறிக்கையிடுமாறு உத்தரவு…

by admin

ஆனந்த சுதாகரனின் வழக்கு தொடர்பான முழு விபரங்களையும் அறிக்கையிடுமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் ஜனாதிபதி செயலகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 26 ஆம் திகதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக வடக்கு மாகாணசபையின் ஊடகப்பிரிவு இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக ஆனந்த சுதாகரனிற்கு எதிரான வழக்கின் நீதிமன்ற விசாரணை அறிக்கை மற்றும் வழங்கப்பட்ட தீர்ப்பு ஆகிய விபரங்கள் அடங்கிய ஒரு விரிவான அறிக்கை ஒன்றை வழங்குமாறு ஜனாதிபதி செயலகம் விடுத்த உத்தரவில் தெரிவிக்க்கப்பட்டுள்ளது.

அறிக்கை

ஆயுட்கால சிறைத்தண்டனைக் கைதி சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரன்

ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி கிளிநொச்சியைச் சேர்ந்த சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரன் என்பவரின் மனைவி யோகராணி நோய்வாய்ப்பட்டு 15.03.2018இல் இறந்து போனமை பற்றியும் அவரின் இறுதிக்கிரிகைகளில் கலந்து கொள்வதற்காக கணவர் சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரனுக்கு மூன்று மணித்தியாலங்கள் மட்டுமே சிறைச்சாலைகள் நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டமை பற்றியும் அனைத்து ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் பிரஸ்தாபித்திருந்தன.

இந் நிலையில் 18.03.2018 அன்று பலத்த பொலீஸ் பாதுகாப்புடன் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட தந்தையை அவரின் இரு சின்னஞ் சிறு பாலகர்கள் (மகனும் மகளும்) இறுகப்பற்றிக் கொண்டமையும் அனுமதிக்கப்பட்ட மூன்று மணித்தியாலங்கள் முடிவடைந்த நிலையில் சிறைச்சாலை வாகனத்தில் தந்தையார் ஏற்றப்பட்ட போது அவரைப் பின் தொடர்ந்த அந்த பச்சிளம் பாலகி தானும் அந்த வாகனத்தில் தந்தையுடன் செல்ல எத்தனித்தமையும், தடுக்கப்பட்ட போது கதறி அழுது அடம்பிடித்தமையும் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியதுடன் காவல் கடமைகளில் இருந்த பொலீஸாரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்திருந்தது.

இந்த அவல நிலை போக்கப்பட வேண்டும் என்ற பலமான கோரிக்கைகளுக்கு அமைவாக கௌரவ வடக்கு மாகாண முதலமைச்சர் அவர்கள் நிலையை விபரித்து ஒரு கருணை மனுவை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களுக்கு 21.03.2018திகதியிடப்பட்ட NP/CM/Res/Prisoner/2018 இலக்க கடித மூலம் அனுப்பியிருந்ததுடன் அதில் குறிப்பிட்ட இரண்டு பச்சிளங் குழந்தைகளின் வயது மற்றும் தற்போதைய நிலை ஆகியவற்றைக் கருத்தில்க் கொண்டு ஆயுட்கால தண்டனை அனுபவித்து வரும் சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரனுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதன் மூலம் அந்தப் பிஞ்சுகளின் அவலநிலையை போக்கி உதவுமாறு கோரிக்கையும் விடுத்திருந்தார்.

கௌரவ வடமாகாண முதலமைச்சர் அவர்களின் கோரிக்கையை கவனமாகப் பரிசீலனை செய்த ஜனாதிபதி அலுவலகம் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தை விரிவான அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு தமது 26.03.2018 திகதியிடப்பட்ட PS/LD/GEN/24-12/2017  கடித மூலம் கோரியுள்ளதுடன் குறிப்பிட்ட அரசியல் கைதிக்கு எதிரான வழக்கின் நீதிமன்ற விசாரணை அறிக்கை மற்றும் வழங்கப்பட்ட தீர்ப்பு ஆகிய விபரங்களுடன் அடங்கிய ஒரு விரிவான அறிக்கையைக் கோரியிருப்பது பற்றி கௌரவ வடமாகாண முதலமைச்சர் அவர்களுக்கும் அறியத்தரப்பட்டுள்ளது.

இந்தத் தகவல்கள் ஊடகங்களின் கவனத்திற்காக கௌரவ முதலமைச்சரின் அலுவலக ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது.
31.03.2018

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More