குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனைகளை காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணியகம் பார்க்கும் என முன்னாள் ஜனாதிபதியும் , தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் தலைவருமான சந்திரிக்கா குமாரதுங்கா தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்திரிக்காவிற்கும் , உளவியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களுடன் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது உளவியல் செயற்பாட்டாளர்களால் , எமது பிரதேசங்களில் காணாமல் ஆக்கப்படவர்களில் உறவினர்கள் , தமது உறவுகள் எங்கோ ஓர் இடத்தில் உயிருடன் மறைத்து வைக்கப்பட்டு உள்ளனர் என நம்பிக்கையுடன் இருக்கின்றார்கள். அதனால் அவர்கள் கடும் மனவுளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர் என எடுத்து கூறினார்கள்.
அதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதியும் , தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் தலைவருமான சந்திரிக்கா குமாரதுங்கா , அவர்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்காக தான் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணியகம் உருவாக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அது தொடர்பில் பார்த்துக்கொள்வார்கள். நாம் அந்த குடும்பங்களின் பொருளாதார ரீதியான முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும் என தெரிவித்தார்.