195
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
யாழ்.நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கபட்டவர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின் போது பிரதிவாதிகள் சார்பில் சட்டமா அதிபர் முன்னிலையாக முடியும் என யாழ்.மேல் நீதிமன்று கட்டளை வழங்கியுள்ளது.
குறித்த மனு மீதான விசாரணை இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போதே நீதிபதி கட்டளை வழங்கினார்.
குறித்த கட்டளை தொடர்பில் நீதிபதி தெரிவிக்கையில் ,
குறித்த வழக்கில் முதலாவது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டு உள்ளவர் அக்கால பகுதியில் நாவற்குழி இராணுவ முகாமுக்கு பொறுப்பாக இருந்த மேஜர் ஜெனரல் துமிந்த கொப்பட்டிவெலான அரச கடமையில் இருந்த போதே இச் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகின்றது.
அரச அதிகாரிகளுக்கு எதிரான வழக்குகளில் சட்டமா அதிபர் முன்னிலையாக வேண்டிய கடப்பாட்டு உள்ளது. விரும்பினால் மாத்திரமே அவர் அதில் இருந்து விலகி கொள்ளலாம்.
இந்த மன்றில் முன்வைக்கப்பட்டு உள்ள ஆட்கொணர்வு மனு அரசியலமைப்புக்கு உட்பட்டே முன் வைக்கப்பட்டு உள்ளது. உரிமை மீறப்பட்டு உள்ளதா ? இல்லையா ? என ஆராயபட்டு விசாரணைகளின் போது உரிமை மீறப்பட்டு உள்ளது என்பதை மன்று கண்டறியும் பட்சத்தில் , முதலாவது பிரதிவாதியான மேஜர் ஜெனரல் துமிந்த கப்பட்டிவெலானக்கு எதிராக குற்றவியல் வழக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும். அதனை சட்டமா அதிபர் திணைக்களம் கொண்டு நடத்தும் .
ஆட்கொணர்வு மனு மீதான கட்டளையை மேல் நீதிமன்று வழங்கும் வரையில் முதலாவது பிரதிவாதியான இராணுவ மேஜர் ஜெனரல் சார்பில் சட்டமா அதிபர் முன்னிலையாகலாம் என நீதிபதி கட்டளை பிறப்பித்தார்.
அதேவேளை இன்றைய தினம் மன்றில் பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையன பிரதி சொலிஸ்டர் ஜெனரல் செய்த்திய குணசேகர குறித்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணைக்கு ஆட்சேபனை தெரிவித்து மன்றில் விண்ணப்பம் செய்தார்.
அதன் போது குறித்த மனுவில் 1996ஆம் ஆண்டு காணாமல் ஆக்கட்டமை தொடர்பில் 98ஆம் ஆண்டே சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யபட்டது. இரண்டு ஆண்டு கால தாமதத்திற்கு பின்னரே. அதேபோன்று 96 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் 21 வருட கால தாமதத்தின் பின்னர் கடந்த 2017 ஆண்டே யாழ்.மேல் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட சில ஆவணங்கள் தெளிவில்லாமலும் உள்ளது அதன் உண்மை பிரதிகள் இணைக்கப்படவில்லை. மற்றும் இங்கு இணைக்கப்பட்டு உள்ள சில ஆவணங்கள் இடைவெளி நிரப்படது போல நிரப்பட்டு உள்ளது. என மனு மீதான விசாரணைக்கு ஆட்சேபனை தெரிவித்தார். அந்த ஆட்சேபனையை நீதிபதி நிராகரித்தார்.
மனுதாரர் முன்னிலையான சட்டத்தரணி கே. சுபாஷினி எழுத்து மூலமான விண்ணப்பத்தினை மன்றில் சமர்பித்தார். அதனை தொடர்ந்து மனு மீதான விசாரணையை மே மாதம் 16ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
குறித்த மனுமீதான விசாரணையின் போது , பிரதிவாதிகள் சார்பில் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் செய்த்திய குணசேகரவுடன் அரச சட்டவாதி நாகரத்தினம் நிசாந்த் முன்னிலையானர்கள். மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி வி.திருக்குமரன் மற்றும் கே. சுபாஷினி ஆகியோர் முன்னிலையானர்கள்.
பின்னணி
1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான படையினர் கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்களை பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர்.
தமது உறவினர்களை மீட்டுத் தருமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள் சட்டத்தரணிகள் கு.குருபரன் மற்றும் கே.சுபாசினி ஆகியோர் ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கடந்த நவம்பர் 9ஆம் திகதி 12 ஆள்கொணர்வு மனுக்கள் தனித்தனியே தாக்கல் செய்தனர்.
அவற்றில் 3 மனுக்கள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை தற்போது மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இடம்பெற்று வருகிறது.
Spread the love