குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யபட்டு உள்ள ஆட்கொணர்வு மனு மீதான விசாரணைகள் அடுத்த தவணை முதல் ஆங்கிலத்தில் நடைபெறும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்தார். நாவற்குழி இராணுவத்தினால் கடந்த 1996ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்றைய தினம் யாழ்.மேல். நீதிமன்றில் நடைபெற்றது.
அதன் போது , பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையன பிரதி சொலிஸ்டர் ஜெனரல் செய்த்திய குணசேகர ஆவணங்களை ஆங்கில மொழிகளில் மொழிமாற்றம் செய்து தருமாறு கோரினார். தமிழ் மொழியில் தனக்கு பரீட்சயம் இல்லை எனவும் விசாரணைகளை ஆங்கில சுருக்கெழுத்தாளர்கள் மூலம் பதிவு செய்ய வேண்டும் எனவும் விண்ணம் செய்தார்.
அதனை அடுத்து ஆங்கில மொழியில் விசாரணையை நடத்துவதற்கு மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளுக்கு ஆட்சேபனை உள்ளதா என நீதிபதி கேட்ட போது , சட்டத்தரணிகள் ஆட்சேபனை தெரிவிக்காததால் ஆங்கில மொழியில் விசாரணைகளை நடத்தப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
இராணுவத்தினருக்கு எதிரான வழக்குகள் மற்றும் சுன்னாகம் காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் சித்திரவதைக்கு உட்படுத்தி படுகொலை செய்யபட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் அனைத்தும் யாழ்.மேல் நீதிமன்றில் இதுவரை காலமும் தமிழ் மொழி மூலமே நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.