149
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் தெரிவின் போது, தங்கள் வாக்குகள் சிதறடிக்கப்பட கூடாது என்பதற்காகவே தாம் நடுநிலை வகித்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் தெரிவு இன்றைய தினம் நடைபெற்றது. அதன் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் வாக்களிக்காது நடுநிலைமை வகித்தார்கள். அது தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
நாங்கள் நடுநிலை வகிக்க காரணம் இந்த சபையில் எங்களுக்கு அறுதி பெரும்பான்மை இல்லாத காரணத்தால் சபையை கைப்பற்ற முடியாது. அதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்புடனோ அல்லது வேறு தரப்பினருடனோ கூட்டு சேரும் எண்ணம் இல்லை. கொள்கை ரீதியாக எமக்கும் கூட்டமைப்பினருக்கும் இடையில் இடைவெளி இருப்பது எல்லோருக்கும் தெரியும் அதனால் எங்களுடைய வாக்குகள் வேறு தரப்பிற்கு போகாத வகையில் நாங்கள் நடுநிலை வகித்தோம். என தெரிவித்தார்.
இராமநாதனை தவிசாளராக்க முயற்சி.
அதேவேளை பெயர் குறிப்பிட விரும்பாத கூட்டமைப்பின் பிரதிநிதி ஒருவர் தெரிவிக்கையில் ,
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் தந்தையாரான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் சதாசிவம் இராமதநாதனை தவிசாளர் ஆக்குவதற்கான பலதரப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
அதனை முறியடிக்கும் வகையில் கூட்டமைப்பை சேர்ந்த நான் உட்பட சிலர் ஏனைய கட்சி தலைமைகளுடன் பேச்சுக்களை நடத்தினோம். தென்னிலங்கை கட்சி ஒன்று யாழில். ஒரு சபையை கைப்பற்ற கூடாது என தீர்மானித்தோம்.
முன்னணியுடன் பேசினோம்.
அந்த வகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் , யாழ்.மாநகர சபை உறுப்பினருமான வி.மணிவண்ணனுடன் பேசி இருந்தேன். அதற்கு அவர்கள் தாம் கூட்டமைப்புக்கு ஆதரவு தர மாட்டோம் என்றார்கள்.
அதற்கு நாம் தவிசாளர் தெரிவின் போது ஆதரவு தரா விடினும் , இரகசிய வாக்கெடுப்பா ? பகிரங்க வாக்கெடுப்பா ? என வரும் போது பகிரங்க வாக்கெடுப்பு என கோருமாறு கேட்டு இருந்தோம்.
ஏனெனில் இரகசிய வாக்கெடுப்பு என்றால், சதாசிவம் இராமநாதன் தவிசாளராக தெரிவாவதற்கான சந்தர்ப்பம் அதிகம் உண்டு என கருதினோம்.
அதனாலேயே பகிரங்க வாக்கெடுப்பை கோரி இருந்தோம். அதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி வாக்களிக்கதமையால் பகிரங்க வாக்கெடுப்பு என ஒரு வாக்கினாலையே தீர்மானிக்கப்பட்டது.
பகிரங்க வாக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்திருக்க வேண்டும்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் , தமிழர் விடுதலை கூட்டணியும் என்ன முறையிலான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என கோரிய போது பகிரங்க வாக்கெடுப்பு என கோரி இருக்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்கும் இந்த சபையின் தவிசாளர் தெரிவில் உள்ள பிரச்சனை தெரிந்து இருக்கும். என தெரிவித்தார்.
அதேவேளை என்ன முறையிலான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உறுப்பினர்களிடம் கோரி 11 உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்பு என கூறிய பின்னர் பகிரங்க வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது.,
நீதிமன்றை நாடுவேன்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் சதாசிவம் இராமநாதன் ஆட்சேபனை தெரிவித்தார். பகிரங்க வாக்கெடுப்பா ? இரகசிய வாக்கெடுப்பா ? என தீர்மானிக்கும் வாக்கெடுப்பு இரகசிய முறையில் நடத்தப்பட்டு இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
அதனை நிராகரித்த உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் சட்டத்தின் பிரகாரம் இவ்வாறே நடைபெறும் என தெரிவித்தார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த , இராமநாதன் , சட்டத்தில் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை என தெரிவித்து அது அது தொடர்பில் தான் நீதிமன்றை நாட உள்ளதாக தெரிவித்தார்.
நீதிமன்றை நாட உரிமையுண்டு.
அதற்கு பதிலளித்த ஆணையாளர் ” நீதிமன்றை நாடுவதற்கான முழு சுதந்திரமும் உரிமையும் உங்களுக்கு உண்டு ” என தெரிவித்து , தவிசாளர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பாக நடாத்தப்பட வேண்டும் என பெரும்பான்மையான உறுப்பினர்கள் கோரியதால் பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.
தவிசாளர் தெரிவின் போது 10 வாக்குகளை பெற்ற சுதந்திர கட்சி உறுப்பினர் சதாசிவம் இராமநாதன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அவருடன் போட்டியிட்ட கூட்டமைப்பை சேர்ந்த த. ஐங்கரன் 11 வாக்குகளை பெற்று தவிசாளராக தெரிவானார்.
Spread the love