குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
இலங்கையின் குடிவரவு குடியகல்வு சட்டத்திட்டங்களை மீறி நாட்டில் தங்கியிருந்து பணம் ஈட்டிய விதத்தை வெளியிட முடியாத வகையில் இலங்கையின் வங்கி ஒன்றில் சுமார் 96 கோடி ரூபாவை வைப்புச் செய்திருந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சீனப் பிரஜைகளை காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சீனப் பிரஜைகள் நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன் அவர்களை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார். சூ டி யெங் சங்க், வெய் பிங்க் லய் ஆகிய சீனப் பிரஜைகளே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து 8 சீனப் பிரஜைகளின் கடவுச்சீட்டுக்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்கள் சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்து வதிவிட வீசாவை பெற போலி ஆவணங்களை சமர்பித்துள்ளதாக நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். (லங்காதீப)