குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் மன்னார் மாவட்டம் உட்பட வன்னி மாவட்டம் பெரும் பாதிப்படைந்துள்ளது. எனவும் , அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டியுள்ளது எனவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இதுவரை 10 மாவட்டங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன என இனங் காணப்பட்டுள்ளன. அதில் 3ஆவது இடத்தில் வன்னிப் பெருநிலப்பரப்பின் மன்னார் மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இடர் முகாமைத்துவ மத்தியநிலையம் வெளிட்ட அறிக்கையின் பிரகாரம் மன்னாரில் 29 ஆயிரத்து 138 குடும்பங்களைச் சேர்ந்த 99 ஆயிரத்து 900பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதுபோன்று முல்லைத் தீவு மாவட்டத்தில் 3ஆயிரத்து 179 குடும்பங்களைச் சேர்ந்த 10ஆயிரத்து 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு குறிப்பாக மேட்டு நிலங்களாகக் காணப்படும் மல்லிகைத்தீவு, வேணாவில், புதுக்குடியிருப்பு மேற்கு மந்துவில், இரணைப்பாலை, தேவிபுரம், மன்னாகண்டல், கைவேலி, சுதந்திரபுரம், உடையார் கட்டு, விசுவமடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவிலும் வறட்சி தாக்கம் ஆரம்பித்துள்ளது. அங்கு ஆயிரத்து 159 குடும்பங்களைச் சேர்ந்த 4ஆயிரத்து 551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக சிறிய குளங்கள் மற்றும் நீர் நிலைகள் மிக வேகமாக வற்றுகின்றன. இந்த நிலையில் குறித்த மாவட்டங்களில் உள்ள பிரதேசத்தில் தண்ணீரைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருள்கள் வழங்கவும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள இடர் முகாமைத்துவப் பிரிவினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.