பங்களாதேசில் சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரச வேலை வாய்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது காவல்துறையினர் ரப்பர் குண்டுகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
பங்களாதேசில் 1971-ம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர போராட்டத்தின் போது பாதிக்கப்பட்ட சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 56 சதவீதம் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பங்களாதேஸ் தலைநகர் டாக்காவில் நேற்று பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழக மைதானத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் இப்போராட்டம் ஏனைய இடங்களில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கும் பரவியதனால் காவற்துறையினர் குவிக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
கலவரத்தை அடக்க காவல்துறையினர் ரப்பர் குண்டுகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்கா பல்கலைக் கழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது