குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நுண் கடன்களை வழங்கி வரும் தனியார் நிதி நிறுவனங்களின் செயற்பாடுகளை முற்று முழுதாக தடுத்து நிறுத்த முடியாமைக்கு அவற்றின் அரசியல் பின்னணியே காரணமாக இருக்கலாம் என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாக வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் 2018 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது ஆலோசனைக் குழுக்கூட்டம் இன்று (12.04.2018) மகளிர் விவகார அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இவ் ஆலோசனைக்குழுக் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் ; இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நுண் கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவனங்கள், குடும்பங்களில் உள்ள பெண்களை இலக்குவைத்து கடன் பொறிக்குள் சிக்கவைத்துவரும் போக்கு தொடர்ந்து வருகின்றது. இக் கடன் பொறிக்குள் இருந்து எமது மக்களை பாதுகாப்பதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் போதிலும் இந் நுண் கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவனங்களின் செயற்பாடுகளை முற்றிலும் தடுத்து நிறுத்த முடியாதிருக்கின்றமைக்கு இந்நிறுவனங்களின் பின்னணியில் இருக்கும் அரசியல் பின்புலமே காரணாமாக இருக்குமோ என்ற ஐயப்பாடு ஏற்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.
இன்று காலை நடைபெற்ற இவ் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில், வட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூகசேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தகமும் வாணிபமும் ஆகிய அமைச்சின் கீழான திணைக்களங்கள் ரீதியான செயற்பாடுகளை வினைத்திறமையுடன் மேற்கொள்வது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
மகளிர் விவகார அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இவ் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில், ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக விளங்கும் மாகாண சபை உறுப்பினர்களான ப.அரியரட்ணம், கே.ரி.லிங்கநாதன், ஆர்.ஜெயசேகரம் மற்றும் அ.பரஞ்சோதி ஆகியோருடன், வட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சின் புதிய செயலாளராக பொறுப்பேற்றுள்ள திருமதி ரூபினி வரதலிங்கம், மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் திரு பொ.வாகீசன், மாகாண தொழிற்துறைத் திணைக்கள பணிப்பாளர் திரு கே.சிறிமோகனன், மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு செயலாளர் திருமதி நளாயினி இன்பராஜ் மற்றும் மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் திருமதி எஸ்.வனஜா ஆகியோர் இவ் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.