குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
புதுவருடப் பிறப்பான இன்று 421 நாளாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த வருடம் பெப்ரவரி 20 ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும், வெளிப்படுத்தலையும் கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டமே இன்று(14) 421 நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இன்றைய தமிழ் சிங்கள் புது வருடப் பிறப்பிலும் தங்களின் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் உறவுகள் வீதியோரத்தில் சமைத்து உண்டு போராடி வருகின்றனர். எல்லாத் தரப்பினர்களும் தங்களை கைவிட்டுவிட்டதாக தெரிவிக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் வலியை தங்களை தவிர வேறு எவரும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எங்களுடைய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்க கூடிய பல வாய்ப்புகளையும் எங்களுடைய மக்கள் பிரதிநிதிகள் தவறவிட்டுள்ளனர் என கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் அமைப்பின் இணைப்பாளர் திருமதி ஆனந்தநடராஜா லீலாதேவி தெரிவித்தார்.