சந்திரயான்-2 விண்கலத்தை ஏவும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதென இஸ்ரோவின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இது குறித்த விவரத்தை அவர் மத்திய விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கிகை சந்தித்து தெரிவித்துள்ளார்.
நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-1 விண்கலத்தை கடந்த 2008-ம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு மையம் அனுப்பியிருந்தது. அதன் தொடர்ச்சியாக சந்திரயான்-2 விண்கலத்தை தயாரித்து உள்ள இஸ்ரோ அதனை இந்த மாதம் இறுதியில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பப்படும் என அறிவித்து இருந்தது.
சந்திரயான்-2 விண்கலத்தில் நிலவின் மேற்பரப்பில் இறங்கி ஆய்வு செய்வதற்காக ரோவர் கருவி ஒன்றும் இணைக்கப்பட்டு உள்ளது. இஸ்ரோ வரலாற்றில் முதன் முதலாக இந்த திட்டம் மேற்கொள்ளப்படுவதால் விண்கலத்தை ஏவுமுன் சில கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை ஏவும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இந்த விண்கலம் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்துக்கான மொத்த செலவு 800 கோடி ரூபா ஆகும் என்பதுடன் இதை வெளிநாட்டில் இருந்து ஏவினால் இந்த தொகை இரு மடங்காக செலவாகும் என இஸ்ரோ தலைவர் சிவன் மத்திய விண்வெளித்துறை இணை அமைச்சருக்கு எடுத்துரைத்துள்ளார்.