12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யும் நடவடிக்கையினை இந்திய மத்திய அரசு ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றதனால் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்என பரவலான கருத்து முன் வைக்கப்பட்டு வருகின்றது
இந்தநிலையில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது இந்திய மத்திய அரசின் சார்பில் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில் அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையை உறுதி செய்யும் வகையில் போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை 27ம்திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது