எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கும்… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள உடன்படிக்கைக்கு அமைய மே மாதம் முதலாம் திகதி பெட்ரோல் உட்பட பெட்ரோலிய எரிபொருட்களுக்கு கட்டண சூத்திரத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் இதன் மூலம் பெட்ரோல் உட்பட எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்ட மூன்றாண்டு உடன்படிக்கைக்கு அமைய இலங்கைக்கு வழங்கும் கடன் உதவியில் மற்றுமொரு தொகை பணம் ஜூன் மாதம் கிடைக்க உள்ளது. இந்த பணத்தை பெற்றுக்கொள்ளும் முன்னர் அது தொடர்பான இணக்கப்பாடுகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.
இதனடிப்படையில், எரிபொருட்களுக்கு கட்டண சூத்திரத்தை அறிமுப்படுத்தி, புதிதாக இறைவரிச் சட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை நிறைவேற்ற வேண்டும். இது குறித்து எதிர்வரும் 7 ஆம் திகதி நடைபெறும் தொழிலாளர் தினத்தில் மக்களுக்கு தெளிவுப்படுத்துவோம். அத்துடன் அன்றைய தினத்தை மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட தினமாக மாற்றுவோம் எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.