குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பூர்வீக வாழ்விடங்களை மீட்கும் இரணை தீவு மக்களின் தன்னெழுச்சியான படகுப் பேரணி போராட்டம் தமது நிலங்களை தரிசிப்பதற்கான வெற்றியாக அமைந்துள்ளது. நீண்ட யுத்தத்தில் தமது பூர்வீக நிலத்தை இழந்த இரணை தீவு மக்கள் அதனை மீட்பதற்காக இரணைதீவு கடற்படை முகாமிற்கு எதிரில் முகாமிட்டு, இம்மக்கள் கடந்த ஒரு வருட காலமாக போராடி வருகின்றனர். இந்தப் போராட்டம் இன்று (23.04.18) ஒரு வருடத்தை எட்டியுள்ளது.
இம் மக்களது சொந்த இடம், தற்போது கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்ட இம் மக்கள் தமது தொழிலை மேற்கொள்ள முடியாமல் உள்ளதாகவும், வாழ்வதற்கு இடமின்றி உறவினர்களது வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் வாழ்க்கையை கழிப்பதாகவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். கடந்த ஐந்து வருட காலமாக காணிப் பதிவுகளை இம்மக்கள் மேற்கொண்டு வருகின்ற போதும், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. கடந்த வருடம் கொழும்பிற்குச் சென்று ஜனாதிபதியியின் மேலதிக செயலாளரையும் இம்மக்கள் சந்தித்திருந்தனர். எனினும், தமது பூர்வீக நிலங்களில் வாழும் உரிமையை நல்லாட்சி அரசாங்கம் இன்னும் வழங்காமல் உள்ளமை வேதனையளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கடற்படையின் கட்டுப்பாட்டிற்குள், பகுதி விடுவிக்கப்படாத பிரதேசமாக தொடர்கின்ற போதும், படகுகளின் மூலம் தன்னெழுச்சியாக புறப்பட்ட அவர்கள் இன்று தமது வாழ்விடங்களை சென்றடைந்துள்ளனர். அங்கு சென்ற மக்களை கடற்படையினர் தடுக்கவில்லை. இதனால் அவர்கள் காலம் காலமாக வாழ்ந்த தமது பூர்விக இடங்களையும் எஞ்சியுள்ள கட்டடங்களையும், வழிபாட்டு இடங்களையும் பெரு மகிழ்வோடு கண்டு கழித்தாக தெரிவிக்கப்படுகிறது.