எலும்பு கூடு நடனம், ஒரே பாட்டில் 7 அதிசயங்கள், ஐஸ்வர்யா ராய், இரண்டு இரட்டை பிறவிகள். அழகான பாட்டி என அத்தனையும் பார்த்து இந்த நாட்களுடன் 20 வருடங்கள் ஆகிவிட்டன. 1998ல் வெளியானது ஜீன்ஸ் படம். இந்தியன் படத்தை இயக்கிய சங்கர் வேறு ஒரு கதையுடன் 4வது படத்தை இயக்குவதற்கு தயாராகிக்கொண்டிருந்தார். அப்போது அவர் அலுவலகத்திற்கு ராம், லட்சுமணன் என இரட்டை பிறவி கலைஞர்கள் சந்தர்ப்பம் கேட்டு வந்தனர். அவர்களை பார்த்ததும் கதை ஒன்று சங்கர் மனதில் தோன்ற, உருவானது பலரது பெரு விருப்பத்திற்கும் உரிய ஜீன்ஸ் படம்.
கதை ரெடி, ஐஸ்வர்யா ராய் தான் கதாநாயகி ஹீராவாக நடிக்க அப்பாசிடம் பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று படத்தை தொடங்கினார் சங்கர். ஆனால் அப்போது அப்பாஸ் ஓய்வெடுக்கக் கூட நேரம் இல்லாமல் படப்பிடிப்புகளில் இருந்ததால் அடுத்தாக அஜித்திடம் கதை கூறப்படுகிறது. அவரும் சில காரணங்களால் ஒப்பந்தமாகவில்லை.
பின்னர் தான் பிராசந்திடம் கதை சென்றிருக்கிறது. கதை பிடித்துவிட அப்போது வந்து 7 பட வாய்ப்புகளை வேண்டாம் என கூறிவிட்டார் பிரசாந்த். வொர்த்து சார்… என்ன வேணா பண்ணலாம் என்பது போல தான் படத்தின் பெறுபேறு இருந்தது.
செந்தில், இரண்டு பிரசாந்தில் யார் விஷ்ணு, யார் ராமு என்பதை கண்டுப்பிடிக்கும் காட்சிகளோடு படம் துவங்குகிறது. செந்திலாகட்டும், படத்தை பார்ப்பவர்களாகட்டும் யாராலும் அதை கண்டுபிடிக்க முடியாது. அத்தனை நேர்த்தி. அதுவரை டபுள் ஆக்ஷன் படங்களில் நாம் பார்த்திடாத நேர்த்தி அது.
குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடிய படத்தையும் பிரமாண்டமாக எடுப்பது சங்கரின் ஸ்பெஷல். அந்த வரிசையில் இந்த படம் மிக முக்கியமானது.
ஹீரோக்கள் அடுத்தடுத்து மாறியது போல இந்த படத்தில் பல மாற்றங்கள் நடந்துள்ளன. ஐஸ்வர்யா ராயின் அப்பாவாக நடிக்க முதலில் எஸ்.பி.பியிடம் சங்கர் கேட்டுள்ளார். ஆனால் அவரால் நடிக்க முடியவில்லை. எனவே எஸ்.வி.சேகர் அந்த பாத்திரத்தில் நடித்தார். அதோடு ஒளிப்பதிவும் முதலில் ஜீவாவிடம் சென்று பின் சந்தோஷ் சிவன் என்று முடிவாகி கடைசியில் அசோக் கையில் நின்றது.
நாசர் நடித்த கதாபத்திரத்தில் கவுண்டமணியை இரட்டை வேடத்தில் நடிக்க வைக்கவே சங்கர் நினைத்திருக்கிறார். ஆனால் இரண்டாம் பாகத்தில் அந்த குணச்சித்திரமானதாக இருப்பதால் அந்த திட்டமும் நடக்கவில்லை. இப்படி எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை என்றாலும், இறுதியில் பெரும் பொழுதுபோக்கு படைப்பாக உருவானது ஜீன்ஸ்.
இந்த படத்தின் சிறப்புக்களில் மிக முக்கியமானது கதாபாத்திரங்கள். ஹீரோ தொடங்கி, ஒரு நிமிடம் மட்டும் வரும் ஐஸ்வர்யா ராயின் உறவினர் வரை அனைவரும் மனதில் நிற்கும் வகையில் பாத்திரங்களை உருவாக்கி உள்ளார் சங்கர். நடிகர் பிரசாந்தின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படம் இது. தனித்துவமாக நடிப்பிலும் நடனத்திலும் பங்களித்தார். உலக அழகியே பின்னால் சுற்றி காதலிக்க வைக்கும் பாத்திரத்தில் பிரசாந்த் அப்போது அத்தனை கச்சிதமாக பொருந்தி இருப்பார்.
‘அத்தனை அழகும் மொத்தம் சேர்த்து என்னை வதைப்பது கொடுமையடி’ என்று ஒரு பாடலில் கூறிப்பிடுவது போல ஒவ்வொரு பிரேமிலும் ‘வாவ்’வாக இருக்கும் ஐஸ்வர்யா ராய்க்கு என்னதான் இருவர் முதல் படம் என்றாலும் மக்கள் மனதில் அவர் முகம் நின்றது இப்படத்தில் தான்.
ஐஸ்வர்யா ராயின் குடும்பத்தினராக வரும் அனைவரும் ரகளை செய்யும் கதாபத்திரங்கள். முக்கியமாக அவரது அம்மாக நடித்தவர்.. என்னமா மௌன விரதமா என்றதும்.. ஆமாங்க என்பதெல்லாம் இன்றும் டிவியில் பார்க்கும் போது ஹிட்டடிக்கும் காட்சிகள்.
மொத்தமாக 20 நிமிடங்கள் வரும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ராதிகா. எதற்கெடுத்தாலும் அர்த்து விட்ருங்க என்று கடுப்பேத்துவதாகட்டும், ஜோடா வாங்கியார மட்டும் தெரியுதோ என்று கணவனை கடிந்து கொள்வதாகட்டும், நீங்க செஞ்சது சரின்னா அவங்க செஞ்சதும் சரிதேன் என்று படத்தை முடித்து வைப்பதாகட்டும் எத்தனை வருடங்களுக்கு பின்பு பார்த்தாலும் ராதிகா நடிப்பு சிறப்பு.
ரஹ்மானின் இசையே எப்போதும் பிரமாண்டம் தானே.. இதில் ரகுமானும் வைரமுத்துவும் இணைந்து செய்தது எழுத்து-இசை பிரமாண்டம் எனலாம்.
இப்படத்தின் பாடல் காட்சிகள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு பார்த்தாலும் புதிதாகவே தான் இருக்கும். அன்பே, அன்பே பாடலின் விஷுவல்சை பார்த்து அசந்து போய் அந்த பாட்டில் பல நுணுக்கங்கள் சேர்த்து மேலும் பிரமாண்டமாக்கினாராம் ரஹ்மான். ஒரு படத்தில் 2, 3 பாடலுக்கு புதிதாக எதையாவது செய்யலாம். ஆனால் இந்த படத்தில் ஒவ்வொரு பாடலிலும் புதிது புதிதாக சிலவற்றை அறிமுகப்படுத்தி இருப்பார் சங்கர்.
7 அதிசயங்கள் ஒரே பாட்டில் பார்க்கும் போது, ஓ.. இது தான் பைசா கோபுரமா என்று பார்த்துதோம் அப்போது. எனக்கே எனக்கா பாடலில் விமானம்மீது மீது ஏறி நடனமாடும் இருவரை ரசிக்காத தொண்ணுறுகளை சேர்ந்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்ன?
அடுத்து அதான்.. அதே தான் எலும்பு கூடு நடனம். எலும்பையெல்லம் பேய் பட பிராப்பர்டியாக வைத்திருந்த தமிழ் சினிமாவில் உலக அழகிக்கு அருகில் நடனமாட வைத்தவர் சங்கர். இப்போது இதெல்லாம் எளிதாக நம்மால் பார்க்க கூடியவையாக இருக்கின்றன. ஆனால் அன்றைக்கு இந்த பாடம் ரசிகர்களுக்கு மாறுபட்ட அனுபவத்தைக் கொடுத்திருக்கும்.
படத்தில் வேலைப்பார்த்த ஒவ்வொருவரின் உழைப்பும் படத்தின் ஒவ்வொரு பிரேமில் பிரதிபலித்து இருக்கும். இப்படம் வந்த காலகட்டத்தில் இந்திய சினிமாவில் அதிக செலவில் உருவான படமாக ஜீன்ஸ் இருந்தது. எதிலும் பிரமாண்டம் என எடுக்கப்பட்ட இந்த படம் பிரமாண்ட விருதான ஆஸ்கார் கதவையும் தட்டியதும் குறிப்பிடத்தக்கது.