மனித நாகரீகமானது இயற்கையின் சவால்களை கண்டு அஞ்சாத மனித உழைப்பினாலேயே உருவாக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மே தின வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் மேதின வாழ்த்துச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமது உரிமைகளை வெற்றி கொள்வதுடன் நாட்டிற்காக தமது கடமைகள் மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு எந்தவிதமான குறைபாடுமின்றி அர்ப்பணிப்புடன்செயற்படுவதற்கு அனைத்து உழைக்கும் மக்களுக்கும் பலம் மற்றும் துணிச்சல் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.
பிரதமர் ரணில்விக்கிரமசிங்க மே தினத்தை முன்னிட்டு வெளியட்டுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள மே தினச்செய்தி பின்வருமாறு:
மே தினச் செய்தி
நவீன தொடர்பாடல், தொழிநுட்ப முன்னேற்றத்துடன் ஊழியத்திற்கான பெறுமதி மற்றும் அதன் பயன்பாடு மிகவும் விரிவடைந்துள்ளது. உழைக்கும் மக்கள் என்போர் இனிமேலும் தொழிற்சாலையில், பண்ணையில் மாத்திரம் வேலை செய்வோர் அல்ல. உருவாகியுள்ள பரந்த தொழில்ரீதியான சூழலில் வேலை செய்யும் மக்கள் தமது உரிமைகள் தொடர்பாக உணர்வுபூர்வமாக நோக்குதல், கலந்துரையாடுதல் போன்றே நாட்டிற்கும் மக்களுக்கும் தன்னால் நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்புக்கள் தொடர்பாகவும் உரிய கவனத்தைச் செலுத்துவது மிகவும் முக்கியமானதாகும்.
உலக வரலாற்றில் தொழிலாளர் போராட்டங்கள் உழைக்கும் மக்களுக்குப் பல உரிமைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளதுடன், தற்காலத்தில் தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக சம்பிரதாய போராட்டங்களைத் தாண்டிச் சென்ற புதிய முறைமைகளைக் கண்டறியும் சவால் நம் அனைவரின் முன்பாகவும் காணப்படுகிறது. நவீன தொடர்பாடல், தொழிநுட்பட முன்னேற்றத்துடன் உழைக்கும் மக்கள் ஒன்று சேர்வதற்கு, தமது உரிமைகள் தொடர்பாகப் பேசுவதற்கு, அது சார்ந்து நிற்பதற்கு மிகவும் செயல்திறமுடைய திறந்த உரையாடல் அரங்குகள் காணப்படுகின்றன.
புதிய நோக்குடன் மிகவும் விரிவான உரையாடல், கலந்துரையாடல், செயல்திறமுடைய தலையீடு என்பவற்றுடன் தொழிலாளர் தினத்திற்குப் புதிய அர்த்தமொன்றை வழங்க நாம் அனைவரும் அணிதிரள வேண்டும். முன்னேற்றமடைந்;த உலகுடன் கை கோர்த்து உண்மையான மறுமலர்ச்சியை நோக்கி எமது நாட்டை உயர்த்துவதற்கு உழைக்கும் மக்களின் உயர்ந்தபட்ச பங்களிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.
தமது உரிமைகளை வெற்றி கொள்வதுடன் நாட்டிற்காக தமது கடமைகள் மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு எந்தவிதமான குறைபாடுமின்றி அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு அனைத்து உழைக்கும் மக்களுக்கும் பலம் மற்றும் துணிச்சல் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.
ரணில் விக்கிரமசிங்க
பிரதம அமைச்சர்..
அமைச்சர் பழனி திகாம்பரம் விடுத்துள்ள மேதின வாழ்த்துச் செய்தி
உழைக்கின்ற மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க வர்க்க பேதங்களை மறந்து ஒற்றுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே அவர்களது உன்னத வாழ்வுக்கும் வளத்துக்கும் வழி வகுக்கும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் விடுத்துள்ள மேதின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மே தின செய்தியில் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
சர்வதேச ரீதியில் மேதினத்தைக் கொண்டாடும் பாட்டாளி வர்க்கத்துக்கு மனம் நிறைந்த மேதின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். தொழிலாள வர்க்கம் எட்டு மணி நேர வேலையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற உன்னத நாளே மேதினம் ஆகும்.
முதலாளி வர்க்கத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராக ஒன்றுபட்டு கிளர்ந்தெழுந்த காரணத்தினால் தான் உலகெங்கும் வியாபித்துள்ள உழைக்கும் மக்களுக்கு விடிவு பிறக்கலாயிற்று. மக்கள் மத்தியில் ஒற்றுமையும் கட்டுப்பாடும் இருந்தால் எத்தகைய அடக்கு முறைகளையும் வென்றெடுத்து வெற்றிக் கொடி நாட்ட முடியும் என்பதை மேதின நிரூபித்துள்ளது.
மலையக மக்களைப் பொறுத்த வரையில் காலம் காலமாக பொய்யான பிரசாரங்களுக்கும் போலியான வாக்குறுதிகளுக்கும் ஏமாந்து விடுகின்ற நிலைமை தொடர்ந்து வருகின்றது. உண்மையான சேவை என்ன என்பதை மக்கள் சிந்திக்கத் தவறி விடுகின்றார்கள். அவர்களின் அறியாமை சிலருக்கு வாய்ப்பாகப் போய் விடுகின்றது. அதனால், தொழிலாள வர்க்கத்தின் மீது சவாரி செய்து சுகபோகங்களை அனுபவிக்கவும் காரணமாகி விடுகின்றது.
நாம் எமது எதிர்கால சந்ததியினரைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்களின் வளமான வாழ்வுக்கு அரசியல் ரீதியில் என்னால் செய்யக் கூடியதை நிச்சயம் செய்து கொடுப்பதற்குத் தயாராக இருக்கின்றேன். அதற்கு மக்களின் ஒற்றுமை உறுதுணையாக இருக்க வேண்டியது அவசியமாகும். நாம் ஏனைய இனங்கள் அனுபவிக்கின்ற உரிமைகள், சலுகைகள் அனைத்தையும் பெற்றுக் கொள்ள தொழிற்சங்க பலம் அவசியமாகின்றது. அதுவே அரசியல் மட்டத்தில் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள அடிப்படை தேவை என்பதை உணர்ந்து எமது ஒன்றுபட்ட சக்தியை எடுத்துக் காட்ட வேண்டும். அதற்கான திடசங்கற்பத்தை மேதினத்தில் மேற்கொள்வோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.