இடம்பெயர்ந்து அகதிகளாக இந்தியாவுக்குச் சென்று படகில் தாயகம் திரும்பிய 12 பேரும் படகோட்டிகள் இருவரும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்ததுள்ளனர். 12 வருடங்களின் பின்னர் அவர்கள் இவ்வாறு திரும்பியுள்ளனர்.
காங்கேசன்துறைக் கடற்பரப்பில் வைத்து நேற்று அதிகாலை படகுடன் கைது செய்யப்பட்ட அவர்கள் காங்கேசன்துறைப் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
3 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேரும் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 4 பர் சிறார்கள். சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் இலங்கை ரூபா செலுத்தி நாடு திரும்பியதாக அவர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் காங்கேசன்துறைக் கடற்படையினர் கைது செய்யும் போது வடமராட்சி இன்பர்சிட்டியைச் சேர்ந்தவர்களது படகில் இரண்டு படகோட்டிகளுடன் காணப்பட்டுள்ளனர். அவர்களும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
திருகோணமலையைச் சேர்ந்த இவர்கள் திருநகரில் இருந்து 2006ஆம் ஆண்டு போர் காரணமாக இடம்பெயர்ந்து மன்னார் ஊடாக இந்தியாவுக்குச் சென்றிருந்தனர். அங்கு புதுக்கோட்டை முகாமில் இருந்தனர். திருமணமானதும் முகாமிலிருந்து வெளியேறி வசித்து வந்தனர். தற்போது 3 குடும்பங்களாக உள்ள இவர்கள்
வீசா இன்றியிருந்ததால் பணம் செலுத்தியே திரும்ப வேண்டியிருந்ததாக காவற்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் வாழ்வாதாரத்துக்கான வருமானம் அற்ற நிலையில் கடந்த 24ஆம் திகதி படகில் புறப்பட்டுள்ளனர். கரையை அண்டிய பகுதியில் 8 நாள்கள் தங்கியிருந்து நேற்றுமுன்தினம் அங்கிருந்து புறப்பட்டு நேற்று அதிகாலை காங்கேசன்துறையை சென்றடைந்தனர். அவர்களுடன் 9 மாதக் கைக்குழந்தையும் தனியாக அழைத்து வரப்பட்டுள்ளார்.
குழந்தையின் தாய் உத்தியோகபூர்வமாக கடந்த 24ஆம் திகதி விமானம் மூலமாக நாடு திரும்பியுள்ளார். அதற்கு முன்னர் அவர் தனது குழந்தையை அவர்களிடம் பொறுப்புக் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். அவர் யாழ்ப்பாணம் புத்தூரைச் சேர்ந்தவர் எனவும், விசாரணைகள் இடம்பெறுவதாகவும், காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.