காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் அதிதி சிங்கிற்கு திருமணம் நடைபெறவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த நிலையில் இவ்வாறு வெளியான தகவல் வெறும்வதந்தி எனவும், அவரை தான் சகோதராக கருதுவதாகவும் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் அதிதி சிங் மறுப்பு தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம், ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இந்த தொகுதிக்குட்பட்ட சதார் சட்டப்பேரவை தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக 29 வயதுடைய அதிதி சிங் இருந்து வருகிறார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படித்து மேலாண்மை துறையில் பட்டம் பெற்றவர்.
அதிதி சிங்கின் தந்தை, அகிலேஷ்சிங்கும் இதே தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். அவரது குடும்பத்தைச் சேர்ந்த தினேஷ் சிங்கும் உத்தரப் பிரதேச மாநில சட்டமேலவை உறுப்பினராக இருந்து வருகிறார். அவர் கடந்த மாதம் பாஜக கட்சி மாறினார். இதையடுத்து அவரது பதவியை பறிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், அதிதி சிங்கை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி திருமணம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதுதொடர்பாக சமூகவலைதளங்களில் அண்மையில் படங்களுடன் தகவல்கள் வெளி வந்தன. ராகுல்காந்தியுடன், அதிதி சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் இருப்பது போன்ற புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டன.
இருவரின் திருமணம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், சோனியா காந்தியின் ஒப்புதலுக்காக இருவரும் காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளி வந்தன. ஆனால், இதனை அதிதி சிங் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அதில், ‘‘இந்த தகவலை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இன்றி வதந்தி பரப்பப்படுகிறது. ராகுல்காந்தி எனது சகோதரர் போன்றவர். அவருக்கு நான் ராக்கி கயிறு கட்டியுள்ளேன். ராகுல் காந்தி மற்றும் எங்கள் குடும்பத்தினரின் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் திட்டமிட்டு சிலர் இந்த தகவலை பரப்பியுள்ளனர். கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த வதந்தி பரப்பப்பட்டுள்ளது’’ எனக் கூறியுள்ளார்.