குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் பகுதியில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரையும் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில்
அதே இடத்தைச் சேர்ந்த 23 வயதுடைய அப்புத்துரை கிரிசன் என்ற இளைஞனின் கழுத்தில் வெட்டுப்பட்டும் 23 வயதுடைய கிரிகேசன் என்ற இளைஞனின் காலில் படுகாயம் ஏற்பட்ட நிலையிலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறனர்.
காவல்துறையினரால் தேடப்பட்டுவரும் ஆவா குழுவின் முக்கியஸ்தரான வினோத் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பலே இந்த வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதாக காவல்துறையினாத் தெரிவித்துள்ள நிலையில் நேற்றையதினம் இணுவிலைச் சேர்ந்த இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த மூவரும் இன்று யாழ் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலேயே மூவரையும் வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன், அன்றையதினம் அவர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்
நீர்வேலியில் ஆலயத்தினுள் இருவர் மீது வாள்வெட்டு
May 8, 2018 @ 04:01
நீர்வேலியில் ஆலயத்தினுள் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது எனவும், அதில் படுகாயமடைந்த இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் காவற்துறையினர் தெரவித்துள்ளனர்.
நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் பகுதியில் வைத்து நேற்று (7.05.18) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது. அதே இடத்தைச் சேர்ந்த 23 வயதுடைய அப்புத்துரை கிரிசி என்ற இளைஞன் கழுத்தில் வெட்டுப்பட்ட நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, சத்திரசிகிச்சை முன்னெடுக்கப்படுகிறது என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
அதே இடத்தைச் சேர்ந்த 23 வயதுடைய கிரிகேசன் காலில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். காவற்துறையினரால் தேடப்பட்டுவரும் ஆவா குழுவின் முக்கியஸ்தர் வினோத் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பலே இந்த வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டது என பொலிஸார் கூறினர்.
நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலில் இருவரும் இருந்துள்ளனர். கோவிலுக்குள் வைத்தே அவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்களின் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிளை கோவில் கிணற்றுக்குள வாள்வெட்டுக் கும்பல் தூக்கி வீசியுள்ளது. ஒருவரின் கைபேசியை கோவிலுக்கு முன்பாக உள்ள தேங்காய் உடைக்கும் கல்லில் போட்டு கும்பல் உடைத்துள்ளது.
அண்மையில், வாள் வெட்டுக்கு இலக்கான நபர் ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவரை தகாத வார்த்தையால் பேசியதாகவும், அந்த கோபத்தின் நிமித்தம், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கிணற்றுக்குள்ளிலிருந்த மோட்டார் சைக்கிள், சைக்கிள் ஆகியன காவற்துறையினரால் மீட்கப்பட்டன. அத்துடன் வாள்வெட்டு நடத்தியவரின் என நம்பப்படும் முகத்தை மறைக்கும் துணியும் காவற்துறையினரால் மீட்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கோப்பாய் காவற்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.