குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ் பெண் ஒருவரை கடுமையான வார்த்தைகளினால் திட்டிய புகையிரத பணியாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு – யாழ்ப்பாண புகையிரதத்தில் பயணம் செய்த பெண் ஒருவரை, புகையிரத பணியாளர் ஒருவர் மிக மோசமான வார்த்தைகளினால் தூற்றும் காட்சிகள் சமூக ஊடக வலையமைப்புக்களில் பரவி வருகின்றது. பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வகையிலும், தகாத வார்த்தைகளினாலும் குறித்த புகையிரத பணியாளர் திட்டியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
துன்புறுத்தல்கள் துன்புறுத்தல்களாகவே பார்க்க வேண்டும், இனவாதம் இனவாதமாகவே பார்க்க வேண்டுமெனவும் இந்த சம்பவத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அதேவேளை இலங்கை புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் குறித்த ஊழியர் ஒருவரின் நடவடிக்கை தொடர்பாக மனிதவுரிமை ஆணைக்குழுவிலும் யாழ். புகையிரத நிலைய அதிபரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டமையை அடுத்து, குறித்த ஊழியர் காவல்துறையினரால்; கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது