Home இலங்கை அபிவிருத்தி என்பது எப்படி அமைதல் வேண்டும்? இப்படி அல்லவா எடுத்தியம்ப வேண்டும்….

அபிவிருத்தி என்பது எப்படி அமைதல் வேண்டும்? இப்படி அல்லவா எடுத்தியம்ப வேண்டும்….

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

அபிவிருத்தி என்பது மக்களின் விருப்பத்துடனும் அவர்களின் வாழ்வியலை இலகுபடுத்தகூடியதாகவும் மேம்படுத்தக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாநகர சபையின் இரண்டாவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போது , யாழ். பிறவுண் வீதி முதலாம் ஒழுங்கையில் அமைந்துள்ள புகையிரதக் கடவையை உரிய முறையில் புனரமைக்க வேண்டும் என கோரி பிரேரணை ஒன்றினை முன்வைத்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

கந்தர்மடம் தெற்கு 8 ஆம் வட்டாரம், பிறவுண் வீதி முதலாம் ஒழுங்கையில் இவ் வீதிக்குடாக ஊடறுத்துச் செல்லும் புகையிரதப் பாதையில் ஒரு புகையிரதக் கடவை உள்ளது. யாழ்ப்பாணத்திற்கான தொடருந்து பாதை மீள் நிர்மாணம் தொடர்பாக அப்போதைய யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் 04.12.2012 அன்று நடைபெற்ற கூட்டத்தில் தொடருந்து பாதை மீள் நிர்மாண பணிப்பாளர் திரு.எஸ். பிறேம்குமார் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது. அக் கூட்டத்தில் தொடருந்து பாதையில் உள்ளதும் 50 ஆண்டுகளாக மக்களின் பாவனையில் இருந்ததுமான மேற்படி புகையிரதக் கடவையை அகற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.


பின்னர் காலப்போக்கில் அப்பிரதேச மக்களின் வேண்டுகையின் பிரகாரம் பாதுகாப்பற்ற, சீர் அற்ற பாதையுடனும் தடுப்புக்கள் அற்றதுமான ஒரு தொடரூந்துக் கடவை அமைக்கப்பட்டது. மக்களும் மிகுந்து இடர்களின் மத்தியில் இப் பாதையை தொடந்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் 19.02.2015 மாலை 7 மணிக்கு இக் கடவையை கடக்க முற்பட்ட யாழ்.இந்துக் கல்லூரி மாணவன் குகப்பிரியன் தொடருந்துடன் மோதி பின்னர் உயிர் இழந்தார் அதன் பின்னர் குறித்த புகையிரதக் கடவையை பாதுகாப்பான புகையிரதக் கடவையாக மாற்றித்தர வேண்டும் என்ற கோரிக்கையும் மக்கள் போராட்டமும் வலுப்பெற்றது.  அதன் பிற்பாடு தொடருந்து பாதை தடுப்புக்கள் ஏற்படுத்தப்பட்டதோடு தொடரூந்து பாதுகாப்பு உத்தியோர்கத்தர் ஒருவரும் பணிக்கு அமர்த்தப்பட்டார். அவர் இன்று வரை தனது கடமையினை தொடருகின்றார். தற்போது இவ் பாதை போக்குவரத்திற்கு உகந்ததாக காணப்படவில்லை. அதனைப் புனரமைத்து தருமாறு பல அரசியல் தலைவர்களுக்கும் அப் பகுதி மக்கள் கடிதம் அனுப்பியும் பயன்ஏதும் கிடைக்கவில்லை.

அப் பகுதி மக்களின் கோரிக்கை தொடர்பாக 16.03.2016 அன்று தொடருரூந்து பாதை பிரதம பொறியிலாளர் செ.ஜோ.பிறேம்குமார் அவர்கள் யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு அனுப்பிய கடித்தில் பிறவண் வீதி 1ஆம் ஒழுங்கையானது நாவலர் வீதியில் இருந்து 239 மீற்றர் தூரத்திலும் அரசடி வீதியிலிருந்து 372 மீற்றர் தூரத்திலும் மட்டுமே இருக்கின்றது என்றும். யாழ்.அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் யாழ்.மாநகர சபை பிரதிநிதி சகல உதவி அரச அதிபர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்று உள்ளது இது இப்பாதை தொடர்பான தகவல்கள். இன்றும் இம் மக்களின் முதன்மையான கோரிக்கையாகவும் தேவையாகவும் இது உள்ளது. 150 குடுபத்தினர்கள் வசிக்கின்ற இப்பிரதேசத்தில் நாளாந்தம் 450 வரையானோர் இவ் தொடருந்து கடவையைக் கடக்கின்றனர்.

இப்பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள், குறிப்பாக (யாழ்.இந்துக்கல்லூரி மாணவர்கள்) உத்தியோகத்தர்கள், வியாபாரிகள், என பல தரப்பட்ட மக்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகின்ற இவ் புகையிரதக் கடவையானது அவர்களுக்கு பெரும் இன்னல்களைத் தருகின்றது. மேலும் இப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டு ஸ்தலாமாகிய இவ் வீதியில் அமைந்துள்ள வேம்படி சித்தி விநாயகர் ஆலயத்தின் தேர் திருவிழாவின்போது தேர் பவனியும் இக் கடவையின் ஊடாகவும் நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அபிவிருத்தி என்பது மக்களின் விருப்பத்துடனும் அவர்களின் வாழ்வியலை இலகுபடுத்தகூடியதாகவும் மேம்படுத்தக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். அந்த வகையில் அவ் மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான தொடருந்துக் கடவை மீள் நிர்மாணத்திற்கு தேவையான ஆக்க பூர்வமான செயற்பாடுகளை எடுக்குமாறும் அதற்கு பின்வரும் தீர்மானங்களை ஏகமனதாக நிறைவேற்ற வேண்டும் என்றும் இவ் உயரிய சபையைக் கோருகின்றேன்.

1. இக் கடவையை மீள் நிர்மானம் செய்து மக்களின் பாதுகாப்பான பாவனைக்கு உகந்த தொடருந்துக் கடவையை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு தொடருந்து திணைக்களத்தினைக் கோருதல்,

2. உடனடித்தேவையாக கருத்திற் கொண்டு தற்காலிகமாக அக் கடவையின் இருபக்கமுள்ள சிறு துண்டு வீதிகளை யாழ்.மாநகர சபை புனரமைத்து அவ் மக்களின் போக்குவரத்திற்கு உதவுதல் இக் கடவை தொடர்பான மேற்படி இரு கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்குமாறு சபையை கோருகின்றேன். என தனது பிரேரணையை முன்வைத்தார்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More