179
*****************
தோற்கடிக்கப்பட்ட
நிலத்தின் நடுவே
தனது இழந்த உடல்கள் மேல்
மண் சாத்தி
நினைவிலிருந்து கண்ணீர்க்
கசிவுகளை பறை சாற்றுகின்றார்.
^^^
அந்த நாளொன்றில்
வந்து முட்டுகின்ற
துக்கத்தை,
வேதனையை,
வலியை,
சொல்ல இயலாத கனத்தில்
வலுவிழந்து நிற்கின்றார்.
^^^
கடைசித் தருணம்
மனித சஞ்சாரங்களிடையே
மரணத்தின் வரைபடத்தை மட்டும்
வரைந்திருந்த நிலம்.
கைவிடப்பட்ட பின்னும்
வெறிச்சோடி
மயானத்தை கிடத்தி இருக்கிறது.
^^^
வெட்டவெளியில்
இழப்புக்கள் எலும்புக் கூடுகளாக
வெளிறி நிற்கும் காலத்தில்
கடைசியாக தப்பித்த
காட்டின் இலைகளைக் கொண்டு
ஒரு நிழல் கூடு அமைக்கின்றார்.?
^^^
மூடுக்கு முகங்களை
தேடியலையும்
கால் துண்டிக்கப்பட்ட நாய்
துயர் வாழ்வில் திரியும்
யாவரிடமும்
மண்டியிட்டு அணுங்குகிறது.
ஒலம் படர்ந்த விழிகள்
இறந்த காலத்தை
மௌனத்தால் புதைத்து விலகுகின்றன.?
×××
கோ.நாதன்.
(கறுப்பு மாதத்தில் வாழ்கின்றோம்)
Spread the love