போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கும், யாழ்ப்பணம் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் உதவி நலத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி கேட்போர் கூடத்தில் நேற்று (10.05.18) இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரால் தர்ஷன ஹெட்டியாராச்சியின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வறிய குடும்பங்களை சேர்ந்த 300 மணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் கீழ் மாதாந்தம் ஆயிரம் ரூபாவினை வங்கியில் வைப்புச் செய்து அதற்கான வங்கி கணக்குப் புத்தகங்கள் மாணவர்களிடம் வழங்கப்பட்டன. அத்துடன் 100 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் வழங்கிவைக்கப்பட்டன.
படையினரால் தெங்கு அபிவிருத்தி சபையுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் ஒரு இலட்சம் தென்னங்கன்றுகளை நடும் செயற்றிட்டத்தின் கீழ் 100 குடும்பங்களுக்கான தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கு சுயதொழிலை மேற்கொள்ளும் பொருட்டு தையல் இயந்திரங்களும், அதற்கான பொருட்களும் கையளிக்கப்பட்டன.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், அருட் சகோதரர் சார்ள்ஸ் தோமஸ், மற்றும் சமயத் தலைவர்கள் உட்பட இராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.