கர்நாடக மாநில சட்டசபையில் உள்ள 224 இடங்களில் 222 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன.
இந்திய நேரம் மாலை 7 மணி நிலவரப்படி, பா.ஜ.க. வேட்பாளர்கள் 97 இடங்களில் வெற்றி பெற்றதாகவும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 74 இடங்களில் வெற்றி பெற்றதாகவும், மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்கள் 37 இடங்களில் வெற்றி பெற்றதாகவும் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் கர்நாடக பிரகின்யவந்தா கட்சி வேட்பாளர்கள் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதவிர, பா.ஜ.க. வேட்பாளர்கள் 7 இடங்களிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 2 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளனர். இந்த நிலையில் தனிபெரும் கட்சியாக வெற்றி பெற்ற பாரதீய ஜனதா கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் குமாரசுவாமி ஆகிய இருவருமே ஆட்சியமைக்க தம்மை அழைக்குமாறு ஆளுநரைச் சந்தித்து, தனித்தனியாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் நிபந்தனையற்ற ஆதரவுடன் ஆட்சியமைக்க தமக்கு பெரும்பான்மை இருப்பதாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும், பெரும்பான்மையை நிரூபிக்க தமக்கு அவகாசம் தரும்படி பாரதீய ஜனதாகவும் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.