குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இறந்தவர்கள் நினைவு கூரப்படுவது அரசாங்கத்தினால் தடுத்து நிறுத்தப்பட கூடிய ஒன்றல்ல எனவும் போரில் உயிரிழந்த படையினரை நினைவுகூருவது போல், வடக்கு, கிழக்கில் வாழும் மக்கள் போரில் உயிரிழந்த தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களை நினைவுகூருகின்றனர் எனவும் அமைச்சர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற மாவட்ட அரசாங்க அதிபர்கள் மாநாட்டின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இனங்களுக்கு இடையில் ஏற்படும் புரிந்துணர்வின்மையாக அவ்வப்போது உலகம் முழுவதும் பல்வேறு மோதல்கள் ஏற்படுகின்றன. இலங்கையிலும் அப்படியான மோதல்கள் நடந்தன. 1971 ஆம் ஆண்டு புரட்சி ஏற்பட்டது.88 ஆம் 89 ஆம் ஆண்டுகளி0ல் மீண்டும் பிரச்சினைகள் ஏற்பட்டன.
வடக்கு கிழக்கில் 30 ஆண்டுகள் போர் நடைபெற்றது. இவை அனைத்துக்கும் பின்னர் சமூகத்தில் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்துவது அவசியம். எனினும் தற்போது சிலர் இது குறித்து கல்வேறு கதைகளை கூறிவருகின்றனர். 1971 ஆண்டு புரட்சியில் உயிரிழந்தவர்கள் வீரர்கள் என அடையாளப்படுத்தப்பட்டு கொழும்பில் உள்ள விஹார மகாதேவி பூங்காவில் வருடந்தோறும் அனுஷ்டிக்கப்படுகிறது.
88 ஆம் 89 ஆம் ஆண்டுகளில் உயிரிழந்தவர்களை தேசப்பற்றாளர்கள் எனக் கூறி அரசியல் கட்சிகள் அனுஷ்டிக்கின்றன. வடக்கு கிழக்கில் நடந்த போரில் எமது இராணுவம் உயிரிழந்தது போல், அங்கு வாழ்ந்த பலர் உயிரிழந்துள்ளனர். அப்படி இறந்தவர்களை நினைவுகூருவது இயற்கையானது.
போர் நடைபெற்ற காலத்திலும் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் அப்பகுதி மக்களை பராமரித்தன. அவர்களின் மனித உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தன. அவர்களுக்கு தேவையான உணவு,மருந்து உட்பட அத்தியவசிய தேவைகளை வழங்கின. அவர்களுக்கு மத சுதந்திரம் வழங்கப்பட்டது. இதனால், எமது அரசாங்கமும் அவர்களுக்கான சுதந்திரத்தை வழங்க வேண்டும். இந்த நிலைமையை புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.