குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறு, கொக்கிளாய் முதலிய கிராமங்களின் மீன் பிடி உரிமைகளை இழந்ததைப்போன்று வடமராட்சி கிழக்கையும் தமிழர்கள் இழக்கும் நிலை ஏற்படுத்தப்படுகிறதா என்று பிரதேச மக்களால் கேள்வி எழுப்பட்டுள்ளது. மணலாறு வெலி ஓயா ஆக்கப்பட்டதுபோல வடமராட்சி கிழக்கும் இலக்கு வைக்கப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பபட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கின் கடற்கரைப் பகுதிகளில் அப் பகுதி சாராத வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தந்த சிலர் கூடாரம் அமைத்து மீன்பிடியில் ஈடுபட முயற்சி செய்தமை அப் பகுதி மக்களிடை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தென்னிலங்கையில் உள்ள மீனவர்கள் சிலருக்கு இப் பகுதிகளில் காணிகள் விற்கப்பட்டதாகவும் காணிகளை வாங்கிய தாம் மீன்டிபியில் ஈடுபட வந்துள்ளதாகவும் அவ் மீனவர்கள் வாதிட்டுள்ளனர்.
இதனை மீனவ அமைப்புக்கள் மறுதலித்துள்ளன. அத்துடன் குறித்த நபர்கள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட தமது பிரதேசத்திற்கு வந்துள்ளதாகவும் அவ் அமைப்புக்கள் கூறுகின்றன. அத்துடன் அவர்கள் சட்டவிரோதமாக குடியேறுவதை அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவர்கள் அவ் இடத்தை விட்டு வெளியேற காலக்கெடு வழங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறே முல்லைத்தீவு நகரத்தை அண்டிய பகுதிகளிலும் தென்னிலங்கை மீனவர்கள் வந்து முகாமிட்டு மீன்பிடிக்கத் தொடங்கியதையடுத்து முல்லைத்தீவு மீனவர்கள் பெரும் எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன் அது முல்லை மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதித்தது.
இந்த விடயம் குறித்து அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதேச மக்கள் கோருகின்றனர். தமது வாழ்வதார வளத்தை சுறண்டும், தமது சுதேசப் பகுதியை அபகரிக்கும் முயற்சிகளுக்கு ஆரம்பத்திலேயே முடிவுக்கு கொண்டு வர அனைவரும் முன்வரவேண்டும் என்று மக்கள் குறிப்பிடுகின்றனர்.
புகைப்படங்கள் – இணையம்