தொல்பொருள் திணைக்களம், மீனவர்களின் வாடி,மகாவலி வலையம், வனவிலங்கு திணைக்களம் என காணிகள் அடையாளப்படுத்தப்படுகின்றன…
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய், நாயாற்றுப் பாலத்தில் இருந்து, கோம்பா சந்திவரையான சுமார் 4 கிலோமீற்றர் நீளமான பிரதேசத்தை தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதேசமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.இந்த வகையில் தொல்பொருள் திணைக்களத்திற்கு என அடையாளப்படுத்தும் நடுகல் நேற்று முன்தினம் 31.05.18) நடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டம், தென்னிலங்கை மீனவர்களின் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டுள்ளது. அவர்கள் வாடிகளை அமைத்து தொழில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மறுபுறத்தில் மகாவலி எல் வலையம் என என்ற பெயரில் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றன.
வனவிலங்குத் திணைக்களத்தினரும், மக்களின் காணிகளை தமக்கு சொந்தமானவை என என அடையாளப்படுத்தி வருகின்றனர். நாயாற்றுப் பாலத்தில் இருந்து கோம்பாச் சந்திவரையில் சுமார் 4 கிலோமீற்றர் பிரதேசத்தில் பொதுமக்களுக்கு சொந்தமான தனியார் காணிகளும் அடங்கியுள்ளன. அவற்றையும் கையகப்படுத்தும் வகையில் தொல்பொருள் திணைக்களத்தின் நடுகல் அமைந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் நாயாற்றில் உள்ள விகாரபதி தங்கிருக்கும் வீட்டிலேயே தொல்பொருள் திணைக்களம் இயங்குகிறது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தொல்பொருள் திணைக்களத்தின் பெயர் பலகையும் அங்கு தொங்கவிடப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.