Home உலகம் மரபுகளை உடைக்கும் ஓர் இஸ்லாமிய அரச குடும்பத்தின் பெண் ‘சுல்தான்’ …..

மரபுகளை உடைக்கும் ஓர் இஸ்லாமிய அரச குடும்பத்தின் பெண் ‘சுல்தான்’ …..

by admin

இந்தோனீசிய தீவான ஜாவாவில் அரசியல் மற்றும் ஆன்மீக அதிகாரங்களில் மிகவும் சக்திவாய்ந்த நிலையில் இருப்பவர் யோக்யகர்தாவின் சுல்தான்.

யோக்யகர்த்தா
Image captionசுல்தானின் மூத்த மகள் தற்போதைய விவாதத்தின் மையமாக உள்ளார்.

தனது மூத்த மகளை தன்னுடைய அதிகாரமிக்க பதவியில் வாரிசு என்ற முறையில் அமர வழிவகுத்த தற்போதைய சுல்தானின் முடிவானது அங்கே கசப்புமிக்க மோதல்களை ஏற்படுத்தியுள்ளது என்பது பிபிசியின் இந்தோனீசிய ஆசிரியர் ரெபேக்கா ஹென்ச்கே கூற்றில் இருந்து தெரிகிறது.

”தலைமுறை தலைமுறையாக யோக்யகர்தாவை ஆளும் சுல்தான் காலத்துக்கு ஏற்றவாறு தன்னை மாற்றியமைத்துக் கொள்வதாக தெரிகிறது” என அப்பெரிய அரண்மனை வளாகத்துக்குள் என்னை அழைத்துச் சென்று சுற்றிக்காட்டிய வெடொனோ பிமோ குரிட்னோ அமைதியாக தெரிவிக்கிறார்.

அரண்மனையில் அப்டி டலம் எனும் அரண்மனை பாதுகாவலர்கள் ஆயிரத்து ஐநூறு பேர் உள்ளனர். அதில் இவரும் ஒருவர். அவரது உடையில் பாரம்பரிய புனித ஜாவனீஸ் குத்துவாள் உள்ளே வைக்கப்பட்டிருந்தது.

”முன்பெல்லாம் இளவரசரை தேர்வு செய்வது கடினமாக இருக்காது. ஏனெனில் சுல்தானுக்கு ஒரு மனைவிக்கு மேல் இருப்பார்கள். ஆனால் உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஜாவா வீடுகளில் எப்போதுமே உண்மையாகவே சக்திவாய்ந்தவராக பெண்தான் இருப்பார்” என பிமோ குரிட்னோ என்னிடம் தெரிவித்தார்.

அரண்மனைக்குள் நுழையும் எவருக்கும் தேவைப்படுவதுபோலவே நானும் பாரம்பரிய உடை உடுத்திச் சென்றேன். நான் பட்டிக் சரோங் எனப்படும் இறுக்கமான ஆடையை கேபாயா என அறியப்படும் கருப்பு பட்டு ரவிக்கையோடு அணிந்து கொண்டேன் . என்னுடைய தலைமுடி பின்னால் இழுக்கப்பட்டு சங்குல் எனப்படும் ஒரு வகை கொண்டை போடப்படும்.

இந்த அரண்மனையில் மரங்களை எந்தெந்த இடங்களில் அமைத்துள்ளார்கள் என்பது முதற்கொண்டு அரண்மனை மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைக்கும் அர்த்தம் இருக்கிறது.

சாவக (ஜாவா) மொழி பேசும் இவர்களின் கலாசாரத்தில் எந்த விஷயமும் நேரடியாக சொல்லப்படுவதில்லை மாறாக குறியீடுகளின் வழியே சொல்லப்படுகின்றன.

யோக்கியகர்தா
Image captionஇளைய இளவரசி தனது திருமண நிகழ்வில்

72வயது சுல்தான் தனது பதவியை சமீபத்தில் மாற்றியுள்ளார். அதன்படி அப்பதவி இரு பாலினத்தவர்களுக்கும் பொதுவானது மேலும் தனது மூத்த மகளுக்கு குஸ்தி கஞ்செங் ரது மங்குபுமி எனும் புதிய பெயர் தந்துள்ளார். இப்பெயரின் அர்த்தம் ”பூமியை வைத்திருக்கும் ஒருவர்”

நேரம் வரும்போது அரியணை ஏறுவதற்கான வரிசையில் மூத்த மகள் இருக்கிறார் என்பதை இவை காட்டுகின்றன.

அவரது பதவிக்கு நிறைய பொறுப்பு இருக்கிறது என நான் கூறியபோது இளவரசி சிரித்தார்.

”அனைத்து குடும்பங்களிலும் உள்ளதை போல மூத்தவளாக எனக்கு எனது தங்கைகளை விட அதிக பொறுப்பு இருக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் நான் என்ன பொறுப்பு வகிக்கப்போகிறேன் என்பது எனது தந்தை எடுக்கும் முடிவில்தான் இருக்கிறது” என சிரித்துக்கொண்டே சொன்னார்.

இளவரசி தனது வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்கிறார் மேலும் அரியணை ஏறுவது குறித்து அரிதாகவே பேசுகிறார். ”இந்த விஷயங்கள் குறித்து கனவு காணக்கூடாது என்று கூறியே நான் வளர்க்கப்பட்டேன்” என்கிறார்,

சுல்தானின் மூத்த மகள்
Image captionசுல்தானின் மூத்த மகள்

ஆனால் ” மற்ற அரசு குடும்பங்களில், இஸ்லாமிய அரசுகளில் ராணிகள் இருக்கவே செய்கிறார்கள். அதைத்தான் இப்போது என்னால் சொல்ல முடியும்” என்கிறார்.

அவரது இளைய சகோதரி குஸ்தி கன்ஜெங் ரது ஹயு முன்னெப்போதுமில்லாத சக்தி இளவரசிகளுக்கு கொடுக்கப்பட்டது குறித்து தைரியமாக பேசுகிறார்.

இளவரசிகள் ஐரோப்பா,அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற இடங்களுக்கு கல்வி கற்ற அனுப்பப்பட்டனர். முன்பு அரண்மனையின் ஆண்கள் ஆதிக்கம் இருந்த பதவிகளில் தற்போது வெவ்வேறு தலைமை பதவிகளை இளவரசிகள் வகிக்கின்றனர்.

”அது பெண்களின் வேலை அல்ல என சொல்லாத பெற்றோரை பெற்றிருக்கும் அதிர்ஷ்டசாலி நான் ” என சரளமாக ஆங்கிலத்தில் பேசுகிறார்.

” சிலருக்கு இது நன்றாக விளங்காது. ஆனால் சுல்தான் சொல்லும்போது நீங்கள் அதன்படி நடக்க வேண்டும்” என அவர் சிரிக்கிறார்.

சுல்தானின் சகோதரர்களுக்கு இந்த விஷயத்தில் உடன்பாடு இல்லை. அவர்கள் வெறுப்புடன் காணப்படுகிறார்கள். பிரபுக்குசுமோ போன்ற பலர் தற்போது சுல்தானுடன் பேசுவதில்லை மேலும் அரண்மனை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை.

சுல்தானின் சகோதரர்கள்
Image captionசுல்தானின் சகோதரர்கள்

”நாங்கள் ஓர் இஸ்லாமிய அரச குடும்பம். சுல்தான் எனும் பதவி ஆண்களுக்கானது. ஒரு பெண்ணை எப்படி சுல்தான் என அழைக்கமுடியும். சுல்தானி என அழைப்பது சாத்தியமில்லாதது” எனக் கூறி சிரிக்கிறார்.

இந்த நடவடிக்கையானது நூற்றாண்டு கால பாரம்பரியத்தை மீறுவது போல ஆகும் என்ற அவர் தனது சகோதரனின் குடும்பம் அதிகாரப்பசி மற்றும் பேராசை கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.

மேலும் என்ன நடக்கும் என்பது குறித்து ஒரு எச்சரிக்கையையும் கொடுத்துள்ளார்.

” எங்களுக்கு குடும்ப பொறுப்புகள் உண்டு அதன்படி இப்போது சண்டையிட மாட்டோம் ஆனால் சுல்தான் இந்த உலகத்தை விட்டுச் சென்ற பிறகு மக்களோடு இணைந்து அவரது மனைவியையும் மகளையும் அரண்மனையை விட்டுத் துரத்துவோம்”

”அவர்கள் அப்புறப்படுத்துவார்கள். அவர்கள் எங்களது குடும்ப உறுப்பினர்களாக தொடரமாட்டார்கள்” என்றார் .

இது கொஞ்சம் குழப்பத்தை உருவாக்கும் என்கிறேன் நான்.

” அது இருக்கட்டும், இங்கே யார் மீது தவறு இருக்கிறது என நினைவு கூர்வோம்”

யோக்யகர்தா

இரண்டு அரசிகள்?

அரண்மனை கோட்டை வாயில்களுக்கு அப்பால் உள்ள மக்கள் எந்த பக்கம் நிற்பது என தயக்கத்துடன் இருக்கிறார்கள். தாங்கள் அரச குடும்பத்தின் முடிவை ஏற்பதாக தெரிவிக்கிறார்கள்.

ஆனால் தீவிர பின்தொடர்பாளர்கள் மத்தியில் தென் கடல் ராணி என்ன எண்ணுகிறார் பற்றி கவலை உள்ளது. ஜாவனீஸ் அரசாட்சியானது பதினாறாம் நூற்றாண்டு வரை நீடித்துள்ளது மேலும் பெரும்பாலான இந்தோனீசியர்களை போலவே அக்குடும்பம் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தது. ஆனால் சடங்கு சம்பிரதாயங்கள் இந்து, பௌத்தம், ஆன்ம வாதம் ஆகியவற்றின் கலவையாக உள்ளன.

யோக்யகர்த்தாவின் சுல்தான் பெண் கடவுளான கஞ்செங் ரது லோரோ கிடுலை மாய மனைவியாக ஏற்கவேண்டும் என்பது மரபு.

”சுல்தானும் தென் கடலின் ராணி லோரோ கிடுலுக்கும் இடையே ஒரு சூளுரை புனித பக்கங்களில் எழுதப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் இருவரும் இணைந்து ஆட்சி நடத்தி அமைதியை பேண வேண்டும்” என விவிரிக்கிறார் சுல்தானின் சகோதரர் யுடானின்ங்கிராட்.

வெட்டப்பட்ட விரல்நகத் துண்டுகள் மற்றும் சுல்தானின் முடி ஆகியவை கடலின் கடவுளுக்கு ஒவ்வொரு வருடமும் கொடுக்கப்படும். இந்தோனீசியாவின் மிக வீரியம் வாய்ந்த எரிமலைகளில் ஒன்றான மவுண்ட் மெரபிக்குள் உள்ள எரிமலை கடவுள் சபு ஜகத்துக்கு படையல் செலுத்துகின்றனர்.

யோக்யகர்தா

 

எரிமலை, மையத்திலுள்ள அரண்மனை, இந்திய பெருங்கடல், மக்களின் பாதுகாப்பு ஆகியயவற்றுக்கு இடையே புனிதமான ஒழுங்கை உறுதிப்படுத்த இப்படையல் வழங்கப்படுகிறது

”இரண்டு ராணிகள் இருந்தால் என்னவாகும்? எப்படி அவர்கள் சேர்ந்து இருக்க முடியும்? அது நடக்குமா எனத் தெரியவில்லை” என அரண்மனைக்கு வெளியே அகுஸ் சுவான்ட்டோ எனும் சுற்றுலா வழிகாட்டி கேள்வி எழுப்புகிறார்.

நான் அரண்மனை வழிகாட்டியிடம் இது குறித்து கேட்டபோது ” அது நல்ல கேள்வி மேலும் நல்ல கருத்து” எனச் சிரித்துக்கொண்டே சொல்கிறார் வெடோனோ பிமோ குரிட்னோ.

”தென் கடலின் பெண்கடவுள் மற்றும் எரிமலை கடவுள் இரண்டையும் சமநிலையில் பாவிப்பது சுல்தானின் பங்கு. மக்களில் சிலர் எரிமலை கடவுளையே மறந்துவிடுகின்றனர். யோக்யகர்த்தா மக்களுக்காக நல்ல முடிவை சுல்தான் எடுப்பார் என நான் நம்புகிறேன்” என்றார் அவர்.

சவாலான நாட்கள்

யோக்யகர்தா நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியின் கவர்னராக சுல்தான் சாத்தியப்படும் மாற்றங்கள் குறித்து முடிவெடுக்கவேண்டும்.

யோக்யகர்தா

இந்தோனீசியா சுதந்திரமடைந்தபோது யோக்யகர்தா அரச குடும்பம் அரசாட்சியை தொடர ஜகர்தா அனுமதித்தது.

ஆகவே இந்தோனீஷியாவில் மக்கள் நேரடியாக தங்களின் தலைவரை தேர்ந்தெடுக்க முடியாத ஒரே இடம் யோக்யகர்தா. 2010-ல் இந்த முறையானது மாற்றப்படவேண்டும் என ஜகர்தா பரிந்துரை செய்தபோது யோக்யகர்தா வீதிகளில் கோபமான போராட்டங்கள் நடந்ததையடுத்து மத்திய அரசு பின்வாங்கியது.

ஆனால் சுல்தான் ஹமெங்குபுவோனோ எக்ஸ் பரந்த அரசியல் மற்றும் வணிக அபிலாஷைகள் கொண்ட சர்ச்சைக்குரிய நவீன தலைவராவார்.

2006-ல் மெரபி எரிமலை சீற்றம் கொண்டபோது எப்போது அப்பகுதியை விட்டு வெளியேறவேண்டுமென்பதை அரண்மனை நியமித்த எரிமலை காப்பாளரைவிட விஞ்ஞானிகள் சொல்வதை மக்கள் கேட்கவேண்டும் என கிராமத்தினரிடம் கூறியுள்ளார்

மந்தமான நகரத்தில் ஷாப்பிங் மால், விளம்பர பலகைகள் மற்றும் உயர்ந்த கட்டடங்கள் கொண்டு வந்து கலாசாரத்தை சுல்தான் மாற்றிவருவதாக யோக்யகர்தாவில் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

ஜாவாவின் தனித்துவமான மிதமான, மறைபொருளான இஸ்லாமை பிரதிபலிக்கும் சுல்தான் மற்றும் க்ரோடனுக்கு இது சவாலான காலமாகும்.

யோக்யகர்தா

பூஜைக்குரிய பொருள்கள் அல்லது சிலைகள், பல கடவுளர்களை வணங்கும் குறிப்புகள் ஆகியவை ஜாவாவில் பிரபலமடைந்து வரும் இஸ்லாமிய வஹாபிச சிந்தனைகளுடன் மோதல்களை ஏற்படுத்துகின்றன.

“அரண்மனைக்காக சமூக ஊடக பக்கங்களை இயக்குகிறேன், பழமைவாத பார்வை இருப்பதை காண்கிறேன்,” என்கிறார் இளவரசி குஸ்டி ஹயூ.

“ஆனால், நாம் இங்கு செய்யும் சடங்குகளுக்கான காரணங்கள் நம்மிடம் இருக்கிறது. அது குரானில் குறிப்பிடப்பட்டதற்கு ஏற்றது போலவே இருக்காது, ஆனால் நாம் தவறான வழியில் செல்லவில்லை. நாம் விசித்திரமான வழிபாட்டு முறைகளை மேற்கொள்வதில்லை” என்று சொல்லி அவர் சிரிக்கிறார்.

“இது ஒரு இஸ்லாமிய அரசு. நம்மை சுற்றி இருப்பவர்களும், மத்திய கிழக்கில் இருப்பவர்களும் நடப்பது போன்றோ அல்லது மிகவும் மத சார்புடன் இருப்பது போன்றோ இருக்கவேண்டியதில்லை. நமது தினசரி நடவடிக்கைகள் அனைத்திலும் இஸ்லாம் பிணைக்கப்பட்டுள்ளது.”

கடந்தகால அரச குடும்பங்கள் ஆன்மீக ரீதியில் தனித்துவமாக இருந்தன; உள்ளுணர்வு மறைக்கப்பட்டிருந்தது என்று பெருமிதமாக கூறும் அவர், ஆனால் அரண்மனையை காலத்திற்கு ஏற்ப திறப்பதுதான் பிழைத்திருப்பதற்கு சாத்தியமான வழி என்று அவர் கூறுகிறார்.

யோக்யகர்தாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

“எனவே இளைஞர்கள் தங்கள் ஜாவா மரபுடன் தொடர்பை இழக்க மாட்டார்கள், ஏனென்றால் நம் கலாசார அடையாளத்தை இழந்துவிட்டால், அதை திரும்பப்பெறமுடியாது.”

ஹிஜாப் என்றழைக்கப்படும் தலையை துணியால் மூடும் பழக்கத்தை தேர்ந்தெடுக்கும் பழக்கம் ஜாவா நாட்டு முஸ்லிம் இளம் பெண்களிடம் அதிகரித்தபோதிலும், அரண்மனையில் ஹிஜாப் அணிவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

“ஹிஜாப் அணியும் பெண்கள் சடங்குகள் செய்ய க்ரட்டோனுக்கு செல்லும்போது தானாகவே முன்வந்து ஹிஜாபை விலக்கிவிடுகின்றனர். வெளியே செல்லும்போது மீண்டும் அணிந்து கொள்கின்றனர்” என்கிறார் ராணி குஸ்டி கஞ்செங் ரடு ஹேமாஸ்.

“இது மதம் சம்பந்தப்பட்டதல்ல. நமது கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை காப்பாற்றும் முயற்சி, இதை சமூகம் புரிந்துக் கொள்ளும். சுல்தான் மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்.”

ஆனால் இது இன்றைய இந்தோனீசியாவில் ஒரு ஆத்திரமூட்டும் நிலைப்பாடாக இருக்கிறது.

அண்மையில் இந்தோனீசியாவின் முதல் அதிபர் சுகாரானோவின் மகள் சுக்மாவதி தெய்வநிந்தனை செய்ததாகவும், அதற்காக மன்னிப்பு கோரும் வகையில், `இஸ்லாமிய புர்காவைவிட, ஜாவாவின் கொண்டை சிறந்தது என்ற பொருள் கொண்ட பாடலை கூறுமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாக அவர் போலிசாரிடம் புகார் அளித்தார்.

யோக்யகர்தா

பாரம்பரியத்திற்கு எதிரான கிளர்ச்சியில் முன்னணி வகிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கும் அரசி மீது சுல்தானின் நெருங்கிய உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அவர் தனது மகள்களை சுயசார்புடையவர்களாகவும், அவர்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் என நம்பும் வகையில் அவர்களை தான் வளர்த்திருப்பதாக அரசி கூறுகிறார்.

“என் மகள்களுக்கு 15 வயதாகும்போது, அவர்கள் அரண்மனையை விட்டு வெளியேறி, கல்வி கற்க வேண்டும் என்றும், கற்றுக் கொண்டவற்றை இங்கு கொண்டு வரவேண்டும் என்று நான் சொன்னேன்” என்கிறார் அரசி.

தலைமைக்காக அவர்களை தயார்படுத்துகிறீர்களா? என்று நான் கேட்டேன்.

அந்த முடிவு சுல்தானின் கையில்தான் இருக்கிறது என்று உறுதியாக சொல்கிறார் அவர்.

“ஆனால், வாரிசு ரத்த சம்பந்தப்பட்டவராக இருக்க வேண்டும். எனவே நீங்கள் மிகவும் ஆழமான சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.”

“காலங்கள் மாறும்போது, மோதல்களும், அதிகாரப் போராட்டங்களும் ஏற்படுவது இயல்பானதே” என்று அவர் மேலும் கூறினார்.

படத்தின் காப்புரிமைGETTY IMAGES

Thanks BBC

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More