பிரதி சபாநாயகர் தெரிவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பரிந்துரைக்கப்பட்ட போதிலும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே அந்த பதவிக்கு நியமிக்கப்படுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளன. இதேவேளை பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சியும், கூட்டு எதிர்க்கட்சியும் தமது தரப்பில் எவரையும் பரிந்துரைப்பதில்லை என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழ் – சிங்கள புத்தாண்டு வாரத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை ஒத்திவைத்திருந்தார். இதன்போது பிரதமருக்கு எதிராக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களின் ஒருவரான முன்னாள் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தனது பதவியினை ராஜினாமாச் செய்திருந்தார்.
இதனையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பெயர் ஆரம்பத்தில் ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்டதுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறியின் பெயரும் கடந்தவாரம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. கடந்த பாராளுமன்ற அமர்வுகளின் போது கூடிய கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட அங்கஜன் இராமனாதனை நியமிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லீம் காங்கிரசும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் சுயாதீனமாக செயற்படும் 16 பேர் கொண்ட அணியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளயை நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அவரையே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் நியமிக்க கட்சியிலும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸ்ஸநாயக்கா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நாளை கூடவுள்ள பாரளுமன்ற அமர்வுகளின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்படுவார் என தெரிய வருகின்றது.